தலையங்கம்

ஒரு பெரும் போரின் சிறு பகுதி இது!

செய்திப்பிரிவு

புதுடெல்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ‘நேரு நினைவு அருங்காட்சியகம் நூலக’த்தின் ‘மதச்சார்பற்ற தன்மை’யைப் பேணிக்காக்க, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவலைப்படுவதைவிட வியப்பதற்குரிய விஷயம் வேறு எதுவும் இல்லை! இதன் இயக்குநராக டாக்டர் மகேஷ் ரங்கராஜன் நியமிக்கப்பட்ட விதம் தொடர்பாக பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நடைபெறும் வசைமாரிகளைவிட நேருவின் நினைவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலும் வேறு எதுவும் இருக்க முடியாது. இயக்குநர் பதவிக்கு அவரை நியமித்த விதத்தில் இருந்த ‘முறையற்ற தன்மை’ குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டதால், கல்வியாளரும் அறிஞருமான ரங்கராஜன் பதவியைவிட்டே விலக நேர்ந்துவிட்டது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவுக்கு இந்த நாடு செலுத்திய நினைவாஞ்சலிகளில் ஒன்று ‘நேரு நினைவு அருங்காட்சியகம் நூலகம்’. இந்த நாட்டுக்கு ஆற்றிய பணிக்காக நேருஜியை எப்போதும் நினைந்து போற்றுவோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தாலும், ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து தங்களுக்கான ஆற்றலையும் ஆதர்சத்தையும் பெறும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் இந்த அருங்காட்சியகத்தை விடுவதாக இல்லை.

நேருவின் சமகாலத்தவர்களுக்கும் பங்களிப்பு இருக்கும் வகையில் அதன் அமைப்பையே மாற்ற வேண்டும் என்ற முணுமுணுப்பு இப்போது வலுக்க ஆரம்பித்திருக்கிறது. டாக்டர் ரங்கராஜனை நியமித்ததில் உள்ள விதி மீறலைச் சுட்டிக்காட்டியதன் மூலம் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா ஒரு உண்மையைக் கூறியிருந்தாலும், அரசு சொல்படி கேட்கக்கூடிய ஒருவரை நியமிக்கத்தான் இந்த ஆட்சேபங்கள் என்பதில் எந்த ரகசியமும் கிடையாது.

இத்தகைய நினைவுச் சின்னங்களை வரலாற்றுக் களஞ்சியங்களா கத்தான் நிறுவினார்கள் முன்பிருந்தவர்கள்; அரசியல் மனமாச்சரியம் காரணமாக இதை நிர்வாகவியலுக்கான நினைவுச்சின்னமாக்க விரும்புகிறார்கள் இப்போதைய ஆடசியாளர்கள். இந்த ஒரு நினைவுச் சின்னத்தைக் கைப்பற்றுவதற்கான ‘சிறு போர்’ இதுவென்று நினைக்க வேண்டாம்; மாறாக வரலாற்றையே திருத்தி எழுத முற்படும் ‘பெரும் போர்’ ஒன்றின் சிறு பகுதி இது.

மேலும், நாட்டின் ஒட்டுமொத்த நினைவுகளையும் ஒருங்கே மறக்கடிக்கச் செய்யும் முயற்சி. இதுபோன்ற நிறுவனங்களின் எதிர்காலம் இனி என்னாகும் என்ற கவலை ஏற்படுவதோடு, அதிகாரபீட ஆசியோடு வரலாறே திருத்தி எழுதப்படக்கூடிய எதிர்கால ஆபத்தையும் ‘நேரு நினைவு அருங்காட்சியகம் நூலகம்’ விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயலும் கேள்விக்குள்பட்டதே; தன்னுடைய ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் இதன் இயக்குநர் பதவிக்கு மகேஷ் ரங்கராஜனை நியமிப்பானேன்? இந்த நிறுவனம் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் புரிந்துகொள்ளக்கூடியதே. அதற்காக அவசர கதியில் நியமன நியதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டிருக்கக் கூடாது அல்லவா?

எது எப்படியானாலும் மோடி அரசின் இந்தப் போக்குக் கொஞ்சமும் ஏற்கத்தக்கதல்ல. நேருவின் சமகாலத்தவர்களுக்கும் இந்த நூலகத்திலும் அருங்காட்சியகத்திலும் இடமளிக்க புதிய அரசு அதைப் புதிதாக அவரவர் பெயர்களிலேயே அமைப்புகளைத் தனித்து ஆரம்பித்துச் செய்ய வேண்டியதுதானே? அடுத்து காந்தி ஸ்மிருதி அமைப்புக்கும் இதே நியாயத்தை விரிவுபடுத்துவார்களா? எல்லா பழைய அமைப்புகளின் அடையாளங்களையும் தனித்துவத்தையும் தட்டித் தரைமட்டமாக்கிவிட்டால் இறுதியில் அங்கே வெறும் செங்கல்லும் சுண்ணாம்பும் குழைத்துக்கட்டிய கட்டிடங்கள்தான் மிஞ்சும்!

SCROLL FOR NEXT