இந்திய மீனவர்கள் இருவரை 2012 பிப்ரவரி 15 அன்று இத்தாலியர்கள் சுட்டுக்கொன்ற வழக்கில், இத்தாலியால் கணிசமான நஷ்டஈடு வழங்கப்படும் வரை இந்த வழக்கை உயிர்ப்போடு வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது குழப்பம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. நஷ்டஈடு வழங்கப்படும் வரை இந்த வழக்கு முடிக்கப்படுவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறியிருக்கிறது. பலியானவர்களின் குடும்பத் தரப்பு வாதங்களும் கேட்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தி ஹேக்’ நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றமானது இத்தாலியக் கப்பல்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியதுடன், இத்தாலியில் உள்ள நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. இந்த உத்தரவைப் பின்பற்றுவதாக இந்திய அரசு அறிவித்துவிட்டதால், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதைத் தாமதப்படுத்துவது முறையல்ல.
இத்தாலியக் கப்பலான செய்ன்ட் ஆண்டனியின் தலைமை மாலுமியாலும் கப்பல் பணியாளர்களாலும் ஏற்பட்ட உயிரிழப்பு, உடல்ரீதியிலான பாதிப்பு, பொருட்களுக்குச் சேதம் ஆகியவற்றுக்கான நிவாரணத்தைப் பெறுவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இரண்டாவதாக, இந்த விவகாரம் நீதிமன்ற நிலுவையில் இருப்பது, ஒரு நியாயமான தீர்வு வரத் தடையாக இருக்கக் கூடாது. விசாரணைகளை இழுத்துக்கொண்டே போவது சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இந்தியா இந்த விவகாரத்தை நீட்டிக்கிறது என்றே பார்க்கப்படும்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தருவதில் நீதிமன்றம் காட்டும் உறுதி வரவேற்கத்தக்கது. நிலுவையில் இருக்கும் விசாரணை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உச்ச முறையான அனுமதியைப் பெற இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கலாம். சட்டத்தைப் பொறுத்தவரை இந்திய அரசானது அரசுத் தரப்பு வழக்கறிஞர் மூலம் விசாரணை நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம். இந்த வழக்கில் அளவுக்கு அதிகமான சட்டக் குழப்பங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எந்த சர்வதேச ஒப்பந்தத்தையும் அமலாக்குவதற்கும் நாடாளுமன்றம் சட்டம் கொண்டுவரலாம் என்று அரசமைப்புச் சட்டத்தின் சட்டக்கூறு 253 கூறுகிறது. இந்திய அரசே இந்த வழக்கைக் கையிலெடுத்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2013-ல் கூறியது. ஆனால் முரண்படும் வகையில், சர்வதேச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை இத்தாலியிடம் ஒப்படைத்திருக்கிறது என்றும், ஆகவே இந்த வழக்கு முடிவதற்குள் இது தொடர்பாக ஒரு சட்டம் தேவைப்படலாம் என்றும் வாதிடப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுவிட்டதால், இது தேவையற்றதாகும். இத்தாலியில் இந்த வழக்கு நியாயமான முறையில் நடப்பதை உறுதிப்படுத்துவதிலும், போதுமான அளவு இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதிலும் இந்தியா கவனம் செலுத்துவது அவசியம்.