தலையங்கம்

மீண்டெழட்டும் பெய்ரூத்!

செய்திப்பிரிவு

லெபனான் நாட்டுத் தலைநகரான பெய்ரூத்தில் நிகழ்ந்த வெடிவிபத்து, ஏற்கெனவே பெரும் இன்னல்களிலிருந்த அந்த நாட்டுக்கு மேலும் ஒரு பேரிடியாக விழுந்திருக்கிறது. கடந்த காலத்தில் உள்நாட்டுப் போர்கள், மதப் பிரிவுகளுக்கு இடையிலான வன்முறை, அந்நியத் தலையீடுகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் போன்றவற்றால் சின்னாபின்னமாக ஆகியிருக்கும் நகரம் பெய்ரூத். இப்போது வெடிவிபத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்; 4,000-த்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சரக்குக் கப்பலிலிருந்து கைப்பற்றப்பட்ட 27 லட்சம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் பெய்ரூத் துறைமுகத்தில் உள்ள ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது; அதுதான் வெடித்திருக்கிறது என்கிறது அரசு. இதன் பின்னணியில் பயங்கரவாத நடவடிக்கைகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது ஒரு தாக்குதல் என்றே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீப காலமாக அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதாரச் சீர்குலைவு, கரோனா பெருந்தொற்று என்று ஒன்றையடுத்து ஒன்றாக லெபனான் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறது. ஊழலுக்கு எதிராகவும், தன் குடிமக்களுக்கு அடிப்படை சேவைகளைக்கூடத் தர இயலாத அரசுக்கு எதிராகவும் கடந்த ஆண்டு பெய்ரூத்திலும் மற்ற நகரங்களிலும் மக்களின் பெருந்திரளான போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், அரசு முடங்கிப்போனது; அப்போதைய பிரதமர் சாட் ஹரிரி பதவிவிலக நேரிட்டது. பொருளாதாரத்தைச் சரிசெய்வதே புதிய அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருந்தது. ஆயினும், அடிப்படைப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது, அந்நியச் செலாவணியும் மிகக் குறைவு. சர்வதேச நிதியத்தின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பும் இந்த ஆண்டு 12%-ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ரூத்வாசிகள் நீண்ட நேர மின்வெட்டுகளால் அவதியுற்றுவருகிறார்கள். இதனால், வெடிப்புக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. தெற்கு எல்லையில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துவருகின்றன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார். இந்த வெடிப்பால் ஆயிரக் கணக்கானோர் வீடுவாசல் இழந்திருக்கிறார்கள். இதனாலும், கூடவே முக்கியத் துறைமுகங்களுள் ஒன்று அழிக்கப்பட்டிருப்பதாலும் அந்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் மிகவும் தீவிரமடையக்கூடும்.

பெய்ரூத்தின் மருத்துவக் கட்டமைப்பு ஏற்கெனவே கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கும் லெபனான் அரசு, இந்த வெடிப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில் நகரத்தை மறுபடியும் சீர்செய்வதென்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. வேற்றுமை பாராட்டாமல் சன்னி கட்சிகளிலிருந்து ஷியா ஹிஸ்புல்லா வரை அனைத்துத் தரப்பினரும் ஒன்றாகக் கடமையாற்றுவது அவசியம். அந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் பெய்ரூத் மீண்டெழ உதவ வேண்டும்.

SCROLL FOR NEXT