முப்பதாண்டுகள் ஆகின்றன மண்டல் ஆணையப் பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை அன்றைய பிரதமர் வி.பி.சிங் வெளியிட்டு; அதுவரை கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெரிய அளவில் தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்நாட்டின் ஆகப் பெரும்பான்மையினரான ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனும் பிரிவுக்கு வி.பி.சிங் அரசு எடுத்த முடிவு ஒளி கொடுத்தது. மேலும், தமிழ்நாட்டு சமூகநீதிக் களத்தில் நெடுங்காலமாகப் பேசப்பட்டுவருவதான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நோக்கி இந்தியா எடுத்துவைத்த முக்கியமான அடி என்றும் அதைச் சொல்லலாம். இந்த முப்பதாண்டுகளில் இடஒதுக்கீடு வெவ்வேறு ரூபங்களை எடுத்துவிட்டிருக்கிறது. சமூக நீதியைப் பொருளாதார அடிப்படையிலும் காணும் வகையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 10% இடஒதுக்கீட்டை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். எப்படிப் பார்த்தாலும், ‘என் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் எங்கே?’ என்ற கேள்வி முக்கியமானது. சாதியச் சமூகமான இந்தியாவில் அது தவிர்க்கவே முடியாதது.
இன்றைக்கு இடஒதுக்கீட்டை ஆதரிப்பதாக அனைத்து அரசியல் கட்சிகளுமே பாகுபாடின்றிச் சொல்கின்றன. இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசிவிட்டு, எந்தக் கட்சியுமே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற அரசியல் கணக்கே இந்த ஆதரவுக்கான முக்கிய காரணம். ஆனால், நடைமுறையில் இடஒதுக்கீட்டுக் கொள்கை நாளும் பொழுதும் தடைகளையே சந்தித்துக்கொண்டிருக்கிறது. மருத்துவ மேற்படிப்பில் அனைத்திந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு சமீபத்தில் நடத்த வேண்டியிருந்த போராட்டத்தை இங்கே நினைவுகூரலாம். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம் என்று சகல விதமான உயர் கல்வி நிறுவனங்களும் படிப்படியாக ஒன்றிய அரசினுடைய அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் சூழலில், இடஒதுக்கீட்டுக்கான சூழல் இன்னும் நெருக்கடியைத்தான் சந்திக்கும் என்ற அச்சத்துக்குக் காரணம், மாநில அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டுக்கும் ஒன்றிய அளவில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டுக்கும் இடையே நிலவும் வேறுபாடு. பிற்படுத்தப்பட்டோரையே எடுத்துக்கொண்டால், மக்கள்தொகையில் குறைந்தது 52% பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டையே உச்ச அளவாக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. இது நியாயமற்றது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சாதிவாரியாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப இடஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. ஆனால், அது நடக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான மனோபாவம்தான் இதற்கான காரணம் என்பதை விளக்க வேண்டியது இல்லை. மண்டல் பரிந்துரைகள் அமலாக்கத்துக்குக் கால் நூற்றாண்டுக்குப் பிறகும், மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 21.57% என்ற அளவிலேயே இருந்தது என்கிற அதன் பின்னுள்ள நியாயத்தைச் சொல்லும்.
இடஒதுக்கீடு என்பது இந்தியப் பின்னணியில் எல்லாச் சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தையே அர்த்தப்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் வாய்ப்புகளும் போட்டிகளும் எல்லா சமூகங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒரு துறையின் மொத்த ஆட்களை எடுத்துப் பார்க்கும்போது அந்தந்தச் சமூகங்கள் உரிய பிரதிநிதித்துவத்தைப் பிரதிபலிக்கின்றனவா என்பதே இதை நாம் உறுதிப்படுத்துவதற்கான அளவுகோல். எவ்வளவுக்கு எவ்வளவு இதில் நாம் தாராளமாகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஜனநாயகம் ஆவோம். அப்படிப் பார்த்தால், மண்டல் வகுத்த பார்வையும் பரிந்துரையும் மேலும் விரிவாக்கப்பட வேண்டும். நம்முடைய மனம் விரிவடைய வேண்டும்.