தலையங்கம்

நியாயத் தீர்ப்புக்கான நேரம்!

செய்திப்பிரிவு

மோதல்கள் நிகழ்ந்த சமூகங்களில் கடந்த காலத் தவறுகளுக்கும் வரம்புமீறிய செயல்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்கவைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஆயினும் வெளிப்படையாகவும் அர்த்தமுள்ள வகையிலும் நீதி வழங்கப் படுவதற்கு, வேண்டும் என்றே கடந்த காலத்தில் நடத்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வது அவசியம்.

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் 2009-ல் முடிவடைந்த போரில் ஈடுபட்ட இருதரப்பும் செய்த கொடூரமான மனித உரிமை மீறல் குற்றங்கள் விரிவாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கும் பொறுப்பை ஏற்பதில் இலங்கை அரசுக்கு உள்ள கடமையை அறிக்கை வலியுறுத்துகிறது. சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணை அதிகாரிகளைக் கொண்ட விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நியமித்து, இக்குற்றச் செயல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதி முன் நிறுத்தி நியாயம் வழங்குவது அவசியம். நடந்த சம்பவங்கள் போர்க் குற்றங்களாகவும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவும் இருப்பதையே ஐ.நா. அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சட்ட விரோதமான உயிர்க் கொலைகள், விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களைக் ‘காணாமல் போகடிப்பது’, மருத்துவமனைகள் மீது வேண்டும் என்றே குண்டுகளை வீசியது போன்ற குற்றச்சாட்டுகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராகக் கூறப்பட்டுள்ளன. இதேபோல, போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற முயன்ற மக்களைப் போகவிடாமல் தடுத்தது, 18 வயது நிரம்பாத சிறுவர்களையும் விருப்பமில்லாத இளைஞர்களையும் கட்டாயப்படுத்தித் தங்களுடைய படையில் சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகக் கூறப்பட்டுள்ளன. திட்டமிட்ட முறையில் - ஒரு அதிகாரக் கட்டமைப்பின் படிநிலைகளின் கீழ் - ஏராளமானோர் திட்டமிட்டு படுகொலைசெய்யப்பட்டிருப்பதை அறிக்கை தனது சுயேச்சையான விசாரணைகளின் அடிப்படையில் ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது.

இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள சின்ன அறிக்கையில், ‘உயர்வேக விசாரணை அமைப்பு’ தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லை; “மனித உரிமை மீறல்கள் இனி இருக்காது, சமரசம் காணப்படும், நல்லிணக்கம் பேணப்படும்” என்ற வாக்குறுதிகள் மட்டுமே உள்ளன. இடைக்கால ஏற்பாடாக விரைவு நீதிமன்றங்களை நியமித்து, போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்ற அறிக்கையின் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்துவதன் மூலம், நீடித்த சமரசம் மற்றும் நல்லிணக்கத்தில் தனக்குள்ள உண்மையான ஈடுபாட்டை இப்போதைய தேசிய அரசு நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது அத்தனை எளிதானதல்ல என்றாலும், இதை அமல்படுத்துவதன் மூலமே சிறிசேன-விக்கிரமசிங்க அரசுக்குள்ள உறுதி சோதிக்கப்படும். இந்த நடைமுறைகளை இந்தியாவும் கூர்ந்து கவனிக்கும். ஏனென்றால், நாடு எல்லை கடந்த இத்தகைய விசாரணை நடைமுறை தெற்காசிய நாடுகளுக்கே புதுமையானது. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்போருக்கும், உள் நாட்டுக்குள்ளேயேதான் விசாரணை நடைபெற வேண்டும் - வெளியார் தலையீடு கூடாது என்போருக்கும் இடையில் சமநிலை ஏற்படும் வகையில் ஒரு தீர்வு இப்போது கூறப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க வேண்டிய நேரம் இது என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டியது!

SCROLL FOR NEXT