தொழில் துறையில் வளர்ச்சியை முடுக்கிவிடுவது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியும் இந்தியத் தொழில் தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கான முயற்சியில் அடுத்த அடியை அரசுதான் எடுத்து வைக்க வேண்டும் என்று தொழிலதிபர்களும், தொழில் துறைதான் எடுத்து வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பும் நினைப்பதுதான் பிரச்சினை. இரு தரப்புமே பரஸ்பரம் நம்பிக்கை வைத்துக் காரியத்தில் இறங்குவதுதான் பலனைக் கொடுக்கும்.
உலகப் பொருளாதாரச் சூழல் இப்போதிருக்கும் நிலையில், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சீனத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டில் உற்பத்தியைப் பெருக்கவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் இதுவே நல்ல தருணம் என்று மோடியும் அவருடைய முக்கிய ஆலோசகர்களும் கருதுகின்றனர். தொழில் துறையில் மேற்கொண்டு முதலீடு செய்யவும் உற்பத்தியைப் பெருக்கவும் தடையாக உள்ளவற்றை அரசுதான் முதலில் நீக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் கருதுகின்றனர். வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும், பொது சரக்கு - சேவை வரி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் நிலங்களை எளிதில் பெற நிலம் கையகப்படுத்தல் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கையில் நீளமான பட்டியல் இருக்கிறது. இவற்றில் பல முன்பு மோடி குழுவினர் வாக்குறுதியாகக் கொடுத்தவைதான்.
தொழில் துறைக்கு மேற்கொண்டு சலுகைகளை அள்ளி வழங்கும் நிலையில் அரசின் நிலை இல்லை. அரசின் வருவாயே குறைந்துகொண்டி ருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் வழக்கமான அளவு பெய்யாமல் பற்றாக்குறையாக இருப்பதால், விளைச்சல் குறையும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. வறட்சி ஏற்பட்டால் அரசுதான் நிவாரணத்துக்குத் தன்னுடைய நிதியிலிருந்து அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அரசின் வற்புறுத்தல் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி வேண்டுமானால் வட்டி வீதத்தைச் சிறிது குறைக்கக் கூடும். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பால் மட்டுமே எல்லாம் நடந்துவிடாது. தவிர, வங்கிகளுக்கே மூலதனப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதை அரசுதான் இட்டு நிரப்ப வேண்டும். இந்தச் சுமைகளையெல்லாம் இப்போதுதான் மோடி அரசு உணர ஆரம்பித்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு உடனடியாகச் செய்யக் கூடியது என்ன?
தொழில் துறையினரை உத்வேகப்படுத்துகிறோம் என்ற பெயரில் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளிக்காமல், சூழலை அவர்களுக்கு விளக்க வேண்டும். அதேசமயம், தொழில்கள் பெருகுவதற்கேற்ற சூழலை, அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்துச் செயலாற்ற வேண்டும். சில முக்கியத் துறைகளில் காலவரம்பு நிர்ணயித்துப் பணிகளை முடுக்கிவிடும் வேலையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, நிலக்கரி வெட்டியெடுப்பு, மின்சார உற்பத்தி, உருக்குத் தொழில், சிமென்ட் தயாரிப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் உள்ள தடைகளை நீக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக அவற்றுக்குத் தரும் உத்தரவாத நடவடிக்கைகளை இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கும் செய்து தரலாம்.
பேரியல் பொருளாதார இயக்கமானது, பல நுண்ணியல் பொருளாதார அமைப்புகளின் கூட்டுச் செயல்களால்தான் சாத்தியமாகிறது. இதை இந்தியத் தொழில் துறையின் அனைத்துப் பிரிவுகளும் உணர்ந்து தங்களுடைய செயல்பாட்டைத் தொடர வேண்டும். உற்பத்திக்கான சூழலில் உள்ள தேக்க நிலை அகற்றப்பட்டாலே, வேலைவாய்ப்புகள் பெருகி வளர்ச்சி தானாக ஏற்படும்!