தமிழ்நாட்டில் விவசாயிகளுக்குக் கிடைத்துவரும் கட்டணமில்லா மின்சாரத்தைத் தொடர்வதில் முதல்வர் பழனிசாமி காட்டிவரும் அக்கறை பாராட்டுக்குரியது. விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, இந்திய அரசு கொண்டுவந்திருக்கும் ‘புதிய மின்சாரச் சீர்திருத்த வரைவு மசோதா-2020’ சட்ட முன்வரைவை ஏற்கெனவே எதிர்த்துள்ள பழனிசாமி, ஒன்றிய மின் துறை இணை அமைச்சருடனான உரையாடலிலும் அதை வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. மாநிலங்கள் உரிமை, விவசாயச் சமூகம் இரு தரப்பு மீதான தாக்குதலாக அமைந்திருக்கும் இந்த விவகாரத்தைத் தேசிய அளவிலான ஒரு விவாதமாகவும் அவர் வளர்த்தெடுக்கலாம். இது தொடர்பில் அமைச்சரிடம் அளித்துள்ள கடிதத்தில், விவசாயிகளுக்கு தமிழகம் கட்டணமில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான நியாயங்களில் ஒன்றாக, மின் உற்பத்தியில் உபரி மாநிலமாக இருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் பழனிசாமி. வீட்டு இணைப்புக்கு 100 யூனிட் மின்சாரம், விவசாயிகளுக்கான கட்டணமில்லா மின்சாரம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் நுகர்வோரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் செலுத்த முடியாது என்றும், அந்த இணைப்புகளுக்கான மானியங்களை அரசே மின்வாரியத்துக்கு நேரடியாக வழங்குவதாகவும் முதல்வரின் கடிதத்தில் தெளிவுபடத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகம் நாட்டிலேயே 49.47% புதுப்பிக்கத்தக்க மின் நிறுவு திறன் கொண்ட மாநிலமாக விளங்கும் நிலையில், நீர் மின்சாரக் கொள்முதலையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதலையும் ஒட்டுமொத்தமாக நிர்ணயிக்க வேண்டும் என்ற முதல்வரின் வேண்டுகோள் முக்கியம் பெறுகிறது. கூடவே, மின் துறைக்காக மாநிலம் எதிர்பார்க்கும் வட்டிச் சலுகையுடனான கடன், மானியம், நிலுவைத் தொகைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி. இவை அனைத்தும் டெல்லி உடனடியாகக் கவனம் அளிக்க வேண்டிய விஷயங்கள். கட்டணமில்லா மின்சாரம் குறித்த விவசாயிகளின் மன உணர்வை ஒன்றிய அரசிடம் பிரதிபலித்திருக்கும் முதல்வர், உள்ளூரில் விவசாயிகளிடம் எழுந்துள்ள சந்தேகங்களையும் களைய வேண்டும். மின்சாரச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துக்கொண்டே விவசாயிகளின் மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தும் பணியை நோக்கி தமிழக அரசு நகர்ந்துகொண்டிருப்பது விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டமே மின்சாரப் பயன்பாட்டைத் தீர்மானிக்கிறது என்னும் நிலையில், மீட்டருக்கான அவசியம் என்னவென்ற விவசாயிகளின் கேள்வி தவிர்க்க முடியாதது.
நீர்ப் பற்றாக்குறை மாநிலமான தமிழ்நாடு, மின் சக்தியின் உதவியுடனேயே உணவுத் தன்னிறைவைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். விவசாயத்துக்கும் லாபத்துக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், விவசாயிகளுக்கான மின்சாரம் அரசாங்கங்களின் கடமை ஆகிறது. முன்கூட்டி அதைச் சிந்தித்த மாநிலமான தமிழகம் விவசாய சமூகத்தைக் கைவிட்டுவிடக் கூடாது!