கரோனாவை எதிர்கொள்ள அரசும் சமூகமும் தயாராவதற்கான அவகாசத்தை எடுத்துக்கொள்வதற்கான உத்தியாக அறிமுகமான ஊரடங்கு, தமிழ்நாட்டைப் பெரும் பள்ளத்தில் தள்ளும் சரிவாக உருவெடுத்திருக்கும் சூழலில், அரசு அதை முடிவுக்குக் கொண்டுவருவதே சரியானதாக இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் குழப்பமான மனநிலையில் தமிழக அரசு இருப்பதை அதன் சமீபத்திய அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன. ஜூன் மாதத்தோடு ஊரடங்கு முடிவுக்கு வரலாம் என்று மக்கள் பரவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழகம் முழுவதுமே ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பதற்கான சமிக்ஞைகளை அரசு இயந்திரம் வெளிப்படுத்தத் தொடங்கியது. பின்னர், இந்தப் பக்கமும் செல்லாமல், அந்தப் பக்கமும் செல்லாமல் இருக்கும் சூழலையே சில மாற்றங்களுடன் நீட்டிப்பதான அறிவிப்பாக அது வெளியானது. ஜூலை 5-க்குப் பிறகு என்னவாகும் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ளது. இந்தச் சமயத்தில் மக்கள் சார்பில் நாம் அரசுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: துணிந்து முடிவெடுங்கள்; மக்களைத் திறந்துவிடுங்கள்!
ஊரடங்கு கரோனாவை எதிர்கொள்வதற்கான தீர்வு அல்ல என்பதை உலக நாடுகள் பலவும் உணர்ந்தே இயல்பு வாழ்க்கைக்கு வேகமாகத் திரும்புகின்றன. அதிகபட்சம் சில மாதங்கள் நீடிக்கலாம் என்று கரோனாவைக் கணக்கிட்ட காலகட்டம் போய் இன்று குறைந்தபட்சம் இந்த வருடத்துக்குள் அதிலிருந்து மீள எந்த வழியும் இல்லை என்கிற காலகட்டத்தை நாம் வந்தடைந்திருக்கிறோம். அப்படியென்றால், கரோனாவை எதிர்கொள்வதற்குப் பொருளாதார வலுவை நாம் அதிகரித்துக்கொள்ள வேண்டும். நேர் எதிராக ஊரடங்கின் பெயரால் பொருளாதாரத்தைச் சேதமாக்கினால் சமூகம் கடுமையான விலையை அதற்குத் தர நேரிடும் என்பதே ஊரடங்கிலிருந்து மீள எல்லாச் சமூகங்களும் காட்டிவரும் உத்வேகத்துக்கான காரணம். இந்தியாவிலேயேகூட தொழில்மைய மாநிலங்கள் அத்தகு முடிவையே எடுத்திருக்கின்றன. தமிழ்நாடு அரசு தடுமாறுகிறது. மாநிலத் தலைநகரமும் பொருளாதாரத்தின் இதயமுமான சென்னையை அது தொடர்ந்து முடக்கிவைத்திருக்கும் நடவடிக்கையானது பெருத்த நாசங்களை உண்டாக்கும். டெல்லி, மும்பை, கொல்கத்தா மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் சென்னையின் மக்கள்தொகை பாதி அல்லது அதற்கும் குறைவு. கரோனாவின் பாதிப்புகளும் குறைவு இல்லை. ஆனால், இவ்வளவு முடக்கத்தில் அந்நகரங்கள் இல்லை. பெரும் நெரிசலைக் கொண்ட மும்பை தொடக்கத்தில் சென்னையைக் காட்டிலும் தீவிரமான பாதிப்புக்கு ஆளாகியிருந்தது; ஆனால், வேகமாகப் பாதிப்பிலிருந்து வெளியே வருகிறது. உலகிலேயே மக்கள் அடர்த்தி அதிகமான தாராவிப் பகுதியை அது கையாளும் விதம் இன்று முன்னுதாரணங்களில் ஒன்றாகப் பேசப்படுகிறது. சென்னையை ஒப்பிட மும்பை துடிப்பாக இயங்குகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
கரோனாவின் தொடர்ச்சியாக ஊரடங்கையும் தொடரும்போது நோய்க்கு ஆளானவர்கள் போக, நோய்க்கு ஆளாகாதவர்களும் செயலற்றும் வீட்டுக்குள் முடங்கியும் பெரும் மனவுளைச்சலைச் சந்திக்கின்றனர். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்திருக்கிறது. தமிழக அரசு கரோனா தொடர்பாக ஆலோசனை வழங்க நியமித்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவும்கூட ஊரடங்கைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. “மருத்துவ நடவடிக்கைகளை அப்படியே தொடர வேண்டும்; பரிசோதனைகளை அதிகரித்து இறப்பைக் குறைக்க வேண்டும்; ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைக்கவில்லை” என்று அது தெளிவாகவே கூறிவிட்டது. சென்னை பிராந்தியத்தை முடக்கியதோடு அல்லாமல், ஏனைய பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்தை முடக்குவது, ஞாயிற்றுக்கிழமைகளை எந்தச் செயல்பாடும் இல்லாமல் ஆக்குவது என்று அடுத்தடுத்து அது முன்னெடுக்கும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தர்க்கரீதியாக நியாயப்படுத்தக்கூடியவை அல்ல. பெருகும் நோய்த் தொற்று அரசியல்ரீதியாக என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதே இன்றைய கவலையாக அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. ஊரடங்கை நீக்கி தொற்று மேலும் அதிகமானால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்படிப் பதில் அளிப்பது என்பதுதான் அரசின் முன்னுள்ள கேள்வி என்றால், அதற்கான ஒரே வழி அனைத்துக் கட்சிகளுடனும் கலந்து பேசி ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். சமூகத்தில் விழிப்புணர்வையும், தொடர் மருத்துவச் செயல்பாடுகளையும் அரசு முன்னெடுக்கட்டும்; போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு தமிழ்நாடு மீண்டும் தன் இயல்புநிலைக்குத் திரும்பட்டும்!