தலையங்கம்

மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறதா பதஞ்சலி?

செய்திப்பிரிவு

தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு கரோனா அதிவேகமாகப் பரவிக்கொண்டிருப்பதை அடுத்து, கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக பதஞ்சலி ஆயுர்வேதா சமீபத்தில் கூறியிருப்பதும், அதற்குக் கிடைத்த ஊடக வெளிச்சமும் இந்தியாவில் ஒழுங்காற்றும் அமைப்புகள் எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. எந்த வித நெறிமுறைகளும் பின்பற்றப்படாததுடன் அரசுத் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கரோனில் என்று பெயரிடப்பட்ட அவர்களின் மருந்து மருத்துவ வெள்ளோட்டத்தில் அனைவரையும் குணப்படுத்தியிருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. போலி மருத்துவமும் ‘அற்புத மருந்து’களும் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் அதே வேளையில், பதஞ்சலி நிறுவனம் கூறுவதை அலட்சியப்படுத்திவிட்டுப் போக முடியாது. ஏனெனில், பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிறுவனம் நடத்திய மருத்துவ வெள்ளோட்டத்தில் 45 பேருக்கு அவர்களின் புதிய மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது; 50 பேருக்கு ‘விளைவில்லா மருந்து’ (ப்ளஸீபோ) கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் கரோனா தொற்றாளர்கள். இந்த வெள்ளோட்டத்தின் மூன்றாம் நாள், புது மருந்து கொடுக்கப் பட்டவர்களில் 31 பேர் குணமாகியிருக்கிறார்கள், விளைவில்லா மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 25 பேர் குணமாகியிருக்கிறார்கள். அந்த வெள்ளோட்டத்தில் குறைவானவர்களே பங்குகொண்டார்கள். இது போதுமானதல்ல. ஏழாவது நாளில் அனைவரும் குணமாகிவிட்டார்கள் என்று ராம்தேவ் கூறிக்கொள்கிறார். இது விளைவில்லா மருந்தையும் உள்ளடக்கும் என்றால், தங்களின் புது மருந்தால்தான் தொற்றாளர்கள் குணமானார்கள் என்ற அவர்களின் வாதம் மேலும் வலுவிழந்துபோகும். இந்த வெள்ளோட்டத்தை நடத்திய மருத்துவர்கள் புது மருந்து தொடர்பான தங்கள் நடைமுறைகளைக் குறித்து ‘மருத்துவ வெள்ளோட்டப் பதிவக’த்திடம் விளக்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் வெள்ளோட்ட முடிவுகளை ஆய்வுக் கட்டுரையாக வெளியிடவோ, சக துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்தவோ இல்லை. ஆகவே, அந்த நிறுவனம் செய்தது அறிவியலுக்குப் புறம்பானது.

பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளுக்கும், நவீன மருத்துவ முறைகளுக்கும் எப்போதுமே உரசல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. என்றாலும், இந்திய ஒழுங்காற்று அமைப்பின்படி எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் விஷயம் என்னவென்றால் இரண்டு மருத்துவ முறைகளின் மருந்துகளும் மருத்துவ வெள்ளோட்டங்களில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட வேண்டும் என்பதுதான். அலோபதியோ ஆயுர்வேதமோ ஹோமியோபதியோ எதுவென்றாலும் அந்த மருத்துவ மரபில் புது மருந்துகள் கண்டுபிடிக்கும்போது உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்’, ‘மருத்துவ மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கழகம்’ ஆகியவற்றின் பொறுப்பாகும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதுவும் குற்றம்தான்.

SCROLL FOR NEXT