தனக்குப் பிடிக்காத தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைக்கும் வேலையை அரசு தொடங்கிவிட்டதோ எனும் கவலையை ‘கிரீன்பீஸ்’ விவகாரம் உணர்த்துகிறது. ‘கிரீன்பீஸ் தன்னார்வத் தொண்டு நிறுவன’ த்துக்கு வழங்கியுள்ள பதிவை அரசு ரத்துசெய்துவிட்டது. பல பெரிய நிறுவனங் களின் ‘வளர்ச்சித் திட்ட’ங்களைக் கேள்விக்குள்ளாகிய அமைப்பு இது. முதலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் ‘கிரீன்பீஸ்’ சங்கடங்களை எதிர் கொண்டது; அடுத்து வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதன் மூச்சையே அடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இதற்குத் தடை ஆணை பிறப்பித்துள்ளது.
வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படியே ‘கிரீன்பீஸ்’ அமைப்பின் நிதி முடக்கப்பட்டிருக்கிறது. “எங்களுடைய அமைப்பை அரசு எதேச்சாதிகாரமாக அடக்கப் பார்க்கிறது; ஊழியர்களுக்கு ஊதியம் தர, முடக்கப்பட்ட எங்களுடைய வங்கிக் கணக்கிலிருக்கும் நிதியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று டெல்லி உயர் நீதிமன்றத்திடம் ‘கிரீன்பீஸ்’ அமைப்பு மனு தாக்கல் செய்திருக்கும் நிலையிலேயே இந்நடவடிக்கைகள் யாவும் எடுக்கப்பட்டன. மிக மோசமான வரைவு வாசகங்களைக் கொண்டது இச்சட்டம் என்று பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. “அரசின் இந்நடவடிக்கை பிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் ஓர் அச்சுறுத்தல்; அரசின் நிலைக்கேற்ப நடந்துகொண்டால் தப்பிக்கலாம் இல்லாவிடில் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரும் என்பதே இதன் பொருள்” என்று பல அமைப்புகளும் தெரிவித்திருக்கின்றன.
வெளிநாட்டு நன்கொடைகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டிய நேரம் இது. 1976-ல் இயற்றப்பட்ட இச்சட்டம் 2010-ல் திருத்தப்பட்டது. மக்கள் சார்ந்த இயக்கங்களைக் கட்டுக்குள் வைக்க இச்சட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றி மட்டுமல்ல, அதன் வழிகாட்டு நெறிகள் விதிக்கும் நிபந்தனைகள் தொடர்பாகவும்கூடப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் இப்போது விதிகளை மாற்றியமைத்துவருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதுடன், அவற்றின் சமூக ஊடகத் தொடர்புகளை ஆய்வுசெய்யவும் முற்படுகிறது. தெருவோரக் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத்தர இந்த அமைப்பு செய்யும் செலவுகளைக்கூட மத்திய உள்துறை அமைச்சகம் தணிக்கை செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. கூத்து என்னவென்றால், ஏனைய அமைப்புகளை இவ்வளவு கிடுக்கிப்போடும் ஆட்சியாளர்கள்தான், அயல் நாடுகளிலிருந்து எந்தவிதக் கேள்வி முறையும் இல்லாமல் அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் நன்கொடைகள் பெற அனுமதிக்கிறார்கள் என்பது.
எல்லாத் தொண்டு நிறுவனங்களும் தான் இருக்கும் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும், செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்; சந்தேகத்துக்கு இடம் தரக் கூடாது என்பதெல்லாம் நியாயமே. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பல கருப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும், பெரும்பாலான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசின் சட்டதிட்டங்களின்படித்தான் செயல்படுகின்றன; மக்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதிலும் மக்களிடையே பணியாற்றுவதிலும் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. இதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறுகளைக் காரணமாக்கி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எனும் கட்டமைப்பையோ அல்லது தனக்கு ஆகாத அமைப்புகள் அனைத்தையுமோ முடக்குவது என்ற போக்கை நோக்கி நகர்கிறது எனும் குற்றச்சாட்டு உண்மையானால், அது நிச்சயம் நல்லதல்ல!