தலையங்கம்

தீவிர சீர்திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் தமிழகக் காவல் துறை

செய்திப்பிரிவு

ஊரடங்கில் அதிகரித்திருக்கும் காவல் துறை வன்முறைக்கு உச்சமாகியிருக்கிறது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த, வணிகர்களான ஜெயராஜ் (58), பென்னிக்ஸ் (31) இருவரின் கொடூர மரணம். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகும் கடையைத் திறந்து வைத்திருந்த ‘குற்றத்துக்காக’ அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள் இருவரும். காவல் துறையினரின் கண்மூடித்தனமான அராஜகம் அவர்களாலேயே மறைக்க முடியாத அளவுக்கு இந்த விஷயத்தில் அம்பலப்பட்ட பிறகும், தமிழக அரசு இந்த விஷயத்தை அணுகும் விதம் மிக மிக மோசமானது. இது தொடர்பில் தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், காவல் துறை மீது சிறு கீறலும் விழுந்திடாத வகையில் கையாளப்பட்ட சொற்கள் காவல் துறையின் வன்முறைகளை நீட்டிக்கவே வழிவகுக்கும். காவல் துறை ஒருவேளை எந்தத் தவறுமே இழைக்காமல்தான் சம்பந்தப்பட்ட ‘தந்தை – மகன் மரணம்’ நிகழ்ந்தது என்றால், ஏன் அரசு அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; ஏன் அமைச்சரும் அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்துப் பேச வேண்டும்; ஏன் காவல் ஆய்வாளர் பணிநீக்கப்பட வேண்டும் என்பதை முதல்வர் விளக்க வேண்டும். பணத்தின் பெயரால் உயிர்களை ஈடுசெய்து, கண்துடைப்பு நடவடிக்கைகளால் நிவாரணத்தின் கதையை முடிப்பதற்கு ஓர் அரசு தேவை இல்லை. இப்போது பணியிடை நீக்கம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவு என்று அறிவிப்புகளை வெளியிடும் தமிழக அரசு தொடக்கத்திலேயே குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் அனைவரையும் பணியிடைநீக்கம்செய்து, வழக்கையும் கொலை வழக்காகப் பதிந்து சுயாதீனமான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.

சாத்தான்குளம் சம்பவத்தைத் தனித்துப் பார்க்க முடியாது. இந்தச் சம்பவம், பொதுவெளியின் கவனத்துக்குப் பரவலாக வந்திருக்கிறது, பொதுச் சமூகமும் இதை விமர்சிக்கிறது என்பதுதான் இதிலுள்ள தனித்துவமே தவிர, காவல் துறையைத் தொடர்ந்து கவனித்துவருபவர்கள் இதை அதன் தொடர் வன்முறைகளில் ஒன்றாகவே பார்ப்பார்கள். காலனிய காலக் கலாச்சாரத்திலிருந்து ஒரு குடியரசுக் கலாச்சாரத்துக்குக் காவல் துறையை மறுவடிவமைக்க வேண்டியதன் அவசியம் பல்லாண்டு காலமாக இங்கே வலியுறுத்தப்பட்டுவருகிறது. குறைந்தபட்சம் ஒரு சுயாதீனமான அமைப்பாக காவல் துறை இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தால்கூட இந்தச் சீர்திருத்தம் சாத்தியமாகியிருக்கலாம். ஆளுங்கட்சிகளின் அதிகாரக் கருவியாகவே காவல் துறை வளர்த்தெடுக்கப்பட்டதன் விளைவாக அந்தச் சாத்தியமும் நாசமானது. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளை அரசின் ஏனைய துறைகள் வழியாக அணுகுவதற்கு மாறாக, நேரடியாகக் காவல் துறையின் கைகளுக்கு மாற்றிவிடும் போக்கு உண்டானது அடுத்த கட்ட சீரழிவுக்கு வழிவகுப்பதானது. உண்மையாகவே நாம் மக்களின் நட்புச் சக்தியாகக் காவல் துறையை உருமாற்ற வேண்டும் என்றால், தீவிரமான சீர்திருத்தத்துக்கு அதை உள்ளாக்குவது ஒன்றே அதற்கான வழி. தொடக்கமாக சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்போர் மீது கடும் நடவடிக்கை அமைய வேண்டும்.

SCROLL FOR NEXT