தலையங்கம்

வரலாற்றை அழித்தெழுதுவதன் மூலம் சொல்லவருவது என்ன?

செய்திப்பிரிவு

புதுடெல்லியின் வரலாற்றை மாற்றி எழுத முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறது பாஜக தலைமையிலான புதுடெல்லி மாநகர மாமன்றம். இந்தியாவின் பணக்காரச் சாலைகளில் முன்னணியில் இருக்கும் ஒளரங்கசீப் சாலையின் பெயரை மாற்றியிருக்கிறது. இனி, அந்தச் சாலையின் பெயர் அப்துல் கலாம் சாலை. மறைந்த குடியரசுத் தலைவருக்கு நாம் பெருமை சேர்ப்பது சரிதான். ஆனால், அதில் உள்ளடங்கியிருக்கும் உள் அரசியலைத்தான் ரசிக்க முடியவில்லை.

இந்து தேசியவாதிகளின் கண்ணோட்டத்தில், ஒளரங்கசீப் வெறுக்கத்தக்க வில்லன். எது வேண்டும் இஸ்லாமா, உயிரா என்று கேட்டு மக்களின் தலைக்கு நேரே வாளை உயர்த்திய கொடூரமான ஆட்சியாளர்; இசையை வெறுத்த சர்வாதிகாரி; யாருடைய காதுகளையும் எட்டிவிடாதபடிக்கு இசையை ஆழக் குழிதோண்டிப் புதைக்கச் சொன்னவர். பாஜகவைப் பொறுத்தவரை ஒளரங்கசீப் அந்நியர், முகலாய வரலாற்றின் ஒரு அம்சம், பாஜக மறக்க விரும்பும் வரலாறு அது. ஒளரங்கசீபுக்குப் பதிலாக இன்னொரு முஸ்லிமின் பெயரைச் சூட்ட வேண்டும். அவர் எல்லா விதங்களிலும் ஒளரங்கசீபுக்கு எதிர்த் தன்மை உள்ளவராக இருக்க வேண்டும். குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அத்தகையவர்; அவர் வீணையை ரசித்தார், மரண தண்டனை விதிக்கப்பட்ட பலருக்குத் தண்டனைக் குறைப்பு வழங்கினார். அப்படியென்றால், நாம் என்ன சொல்லவருகிறோம்?

ஒளரங்கசீப் வீதியின் பெயர் மாற்றப்படவிருக்கிறது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு முதல் செய்தியை வெளியிட்டபோது, “அந்த வீதிக்கு இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு ஆதரவாகப் போராடிய குரு தேஜ் பகதூரின் பெயரைச் சூட்ட வேண்டும், அப்துல் கலாமின் பெயரை வேறு வீதிக்குச் சூட்டிக்கொள்ளலாம்” என்று டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு கோரியது. பிருதிவிராஜன் சாலை அல்லது ராஜேஷ் பைலட் மார்க் என்ற வீதிகளின் பெயர்களை மாற்றுவதற்கு பாஜக முன்வந்திருக்குமா என்று கேட்பதில் நியாயம் இருக்கிறது. அப்படிச் செய்திருந்தால் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் குதித்திருக்கும். கனாட், கர்சான் பெயர்களிலான சாலைகளின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. கேட்டால், காலனிய ஆட்சி விட்டுச் சென்ற அவமானச் சின்னங்கள் மாற்றப்படுவதாகப் பதில் கிடைக்கிறது. காலனியாதிக்கத்துக்கு முன்பாக இந்த நாட்டை ஆண்டவர் ஒளரங்கசீப். அதை அங்கீகரிக்கும் விதத்தில்தான் இந்த வீதியின் ஒரு பகுதிக்கு ஒளரங்கசீப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது இந்தப் பெயர் மாற்றம், அந்தப் பெயர் மாற்றத்துக்கான நியாயத்தை மாற்றி இன்னொரு நியாயத்தைச் சொல்கிறது. டெல்லியிலும் வேறு சில நகரங்களிலும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் பலருடைய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன, அவற்றின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் இப்போது தொடங்கியிருக்கின்றன.

சாதுரியமாகக் காய்களை நகர்த்துவதாக ஆட்சியாளர்கள் நினைக்கலாம். ஆனால், அடிப்படையில் இத்தகைய பெயர் மாற்றங்கள் எல்லாம் வரலாற்றைத் திருத்தி அல்லது அழித்து எழுதும் முயற்சியே. வரலாற்றில் நடந்ததாகக் கருதப்படும் தவறுகளைத் திருத்தத் தொடங்கினால், அதற்கு முடிவே இருக்காது. மேலும், இதைவிட மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் அரசாங்கத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் நிறைய இருக்கின்றன. மக்கள் இவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்ததும் அந்தக் கடமைகளை நிறைவேற்றத்தான்!

SCROLL FOR NEXT