தலையங்கம்

எண்ணிக்கையைவிட கண்ணியம் முக்கியம்

செய்திப்பிரிவு

அறுதிப் பெரும்பான்மை எனும் இலக்கை நோக்கி நகரும் பாஜகவின் யத்தனத்தை இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டமும் நிறுத்தவில்லை. எந்த ஒரு கட்சியும் தனக்கான பங்கைப் பெறுவதற்காக உழைப்பதையும் அதற்காகக் கட்டும் வியூகங்களையும் ஜனநாயகத்தில் குறைகூறிட முடியாது. ஆனால், நாடு இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் உள்ள நிலையிலும்கூட சட்டமன்றங்களில் தனக்குள்ள இடங்கள் வழி மாநிலங்களவையில் கிடைக்கும் நியாயமான இடங்களைத் தாண்டியும் கூடுதலான இடங்களுக்காக எதிர்க்கட்சிகளை உடைத்து, பாஜக நடத்தும் ஆட்டங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 75; கூட்டணிக் கட்சிகள், நியமன உறுப்பினர்கள், ஆதரவு சுயேச்சைகளையும் சேர்த்தால் 102. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் பலம் 39; கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால் 73. ஜூன் 19 அன்று, மாநிலங்களவையின் 24 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது காலியாக உள்ள இடங்களில் ஒரு பகுதி மட்டுமே. இந்தத் தேர்தலோடு, அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களும் முடியும்போது இயல்பாகவே மாநிலங்களவையிலும் பாஜக தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துவிடும். இது நீங்கலாக ஏற்கெனவே பல்வேறு விஷயங்களில் கூட்டணிக்கு அப்பாற்பட்ட கட்சிகளின் ஆதரவும் அதற்குச் சாத்தியமானதாகவே இருக்கிறது. இந்த நிலையிலும் எதிர்க்கட்சிகள் மீதான அதன் வேட்டை நிற்கவில்லை.

ஜம்மு - காஷ்மீர் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தை பாஜக அரசு முன்மொழிந்தபோது, மாநிலங்களவையின் காங்கிரஸ் தலைமைக் கொறடா புவனேஷ்வர் கலிடாவை அவையில் காண முடியவில்லை. அப்போது பதவி விலகிய அவர், இப்போது பாஜகவின் உறுப்பினராக மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சி நான்கு உறுப்பினர்களையும், சமாஜ்வாதி கட்சி மூன்று உறுப்பினர்களையும் நேரடியாகவே இழந்தன. கர்நாடகத்திலும் குஜராத்திலும் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜக நோக்கி நகர்வது தொடர்கதையாக இருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தலில் ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள ராஜஸ்தானில் இரண்டாவதாகவும் ஒரு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது பாஜக. தங்கள் கட்சியை உடைக்கப் பெரும் பேரம் நடப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது காங்கிரஸ்.

ஒரு நாட்டை ஆளும் பெரும் கட்சியாக இது பாஜகவுக்குக் கண்ணியம் சேர்க்காது. எண்ணிக்கை அல்ல; ஆக்கபூர்வமாக நாட்டுக்கு என்னென்ன காரியங்கள் ஆகியிருக்கின்றன என்பதே மக்களால் நினைவுகூரப்படும். ஒரு இக்கட்டான தருணத்திலும்கூட அனைத்துத் தரப்புகளையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டிய ஆளுங்கட்சியானது ஏனைய தரப்புகளிடம் உண்டாக்கும் கசப்பானது நாட்டுக்கு நல்ல விளைவுகளைத் தராது.

SCROLL FOR NEXT