கொரிய தீபகற்பம் முழு அமைதி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு அநேக ஆண்டுகளாகிவிட்டன. இந்தப் பிராந்தியத்துக்குப் பதற்றம் புதிது அல்ல. ஏதாவது ஒரு பேச்சு அல்லது செயல் உயிர்ப் பதற்றத்தை உருவாக்கிவிடுவதைக் கொரிய மக்கள் எப்போதும் எதிர்கொள்கிறார்கள்.
வட கொரியாவில் தனிநபர் ஆட்சி நடக்கிறது. தென் கொரியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. வட கொரியாவுக்கு சீன அரசு பக்கபலமாக இருக்கிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் 1950 முதல் 1953 வரையில் நடந்த போர் இன்னும் முழுமையாக ஓய்ந்துவிடவில்லை. சண்டையிடுவதை இப்போதைக்கு நிறுத்திக்கொள்வோம் என்றுதான் இரு நாடுகளுமே ஒப்புக்கொண்டனவே தவிர, போரை நிறுத்திவிட்டுச் சமாதான சக வாழ்வு வாழ்வோம் என்று எந்நாளும் உடன்படிக்கை செய்துகொண்டதில்லை.
இரு நாடுகளின் நில எல்லையிலும் கடல் எல்லையிலும் வான் எல்லையிலும் அத்துமீறல்கள் நடந்துவிட்டதாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகளும் மோதல்களும் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இப்போது நடந்திருக்கும் மோதலும் பழக்கமானதுதான் என்றாலும், இரு நாடுகளிலும் இருக்கும் நிலைமை மோசமானது என்பதால், உலக நாடுகள் கவலையோடு பார்க்க வேண்டியதாக இருக்கிறது. வட கொரியாவின் அதிபராக வந்திருக்கும் கிம் ஜோங்-உன் அடிக்கடி மாறும் மனநிலை கொண்டவராக இருக்கிறார். தந்தைக்குப் பின் அதிபர் பதவிக்கு வந்த அவர், தனக்கு எதிராகப் போகக்கூடும் என்று நினைக்கும் அதிகாரிகள் எவருக்கும் மரண தண்டனை விதித்துவிடுகிறார்.
இதுவரை அவர் ஆட்சிக்கு வந்த 2011-ல் தொடங்கி, நாட்டின் துணை அதிபராக இருந்தவர் உட்பட, முக்கியப் பதவிகளில் இருந்த 70 பேருக்கு அவரால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்பேர்ப்பட்ட ஒரு ஆட்சியாளரின் தலைமையில் இருக்கும்போதுதான் நூற்றாண்டு காணாத வறட்சியை எதிர்கொண்டிருக்கிறது வட கொரியா. மக்கள் பரிதவிக்கின்றனர். மக்களுடைய அதிருப்தி ஆட்சிமீது திரும்பிவிடக் கூடாது என்பதற்காக அவர்களுடைய கவனத்தைத் திசை திருப்புவதற்காக கிம் ஜோங்-உன், தென் கொரியா மீது போர் தொடுத்துவிடுவாரோ என்ற பேச்சு அடிபட ஆரம்பித்திருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் ராணுவம் விலக்கப்பட்ட நில எல்லைப் பகுதியில் நிலக்கண்ணி வெடித்ததில் 2 தென் கொரியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இது தென் கொரியாவுக்குக் கடும் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. எனவே, வட கொரிய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை, அவர்கள் நாட்டுக்குள் இருப்போருக்குக் கேட்கும் வகையில் அது ஒலிபரப்பத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் தென் கொரிய எல்லையில் பீரங்கித் தாக்குதலில் வட கொரியா இறங்க, பதில் தாக்குதலில் இறங்கியது தென் கொரியா. ஆக, கொந்தளிக்கிறது கொரிய தீபகற்பம். இதில் அதிகம் கவலையடைய வைக்கும் விஷயம், வட கொரியா வசம் அணு ஆயுதம் இருப்பது.
முதிர்ச்சியற்ற தன்மையுடன் நடந்துகொள்ளும் பக்கத்து நாட்டுத் தலைவரைச் சமாளிப்பது தென் கொரியாவுக்கு எளிதான காரியமல்ல. எனினும், வட கொரியாவின் ஆணவச் செயல்களுக்கு ராணுவரீதியாகப் பதில் தேடாமல், ராஜீயரீதியில் பதில் தேடுவதே நல்ல விளைவுகளை உண்டாக்கும்!