தலையங்கம்

ஹாங்காங்கில் தொடர்ந்து தவறிழைக்கிறது சீனா

செய்திப்பிரிவு

ஹாங்காங் மீண்டும் போராட்ட மையம் ஆகியிருக்கிறது; சீன அரசு மேலாதிக்க அணுகுமுறையிலிருந்து விடுபடாதவரை ஹாங்காங் விவகாரம் அமைதி நோக்கித் திரும்பாது என்றே தோன்றுகிறது. புதிய போராட்டங்கள் வெடிக்க சீன அரசு கொண்டுவந்த ‘தேசிய கீதச் சட்டம்’ காரணமாக அமைந்திருக்கிறது. ஹாங்காங்கில் சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் எவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகைசெய்யும் இந்தச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கூடி விவாதித்துக் கொண்டுவந்தது.

முன்னதாக இப்படி ஒரு சட்ட முன்வடிவு ஹாங்காங்குக்கு வெளியே தாக்கல்செய்யப்பட்டதே ஹாங்காங்கியர்களைக் கொதிப்பில் தள்ளியது. அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் போராட்ட அணிவகுப்பைத் திட்டமிட்டார்கள். ஆனால், எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நிறைவேற்றியதுடன் ஹாங்காங் சட்டமன்றமும் கூடிய விரைவில் இதே சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சீன அரசு வலியுறுத்தியிருப்பது ஹாங்காங்கின் தன்னாட்சி மீதான தாக்குதல்தான். ஹாங்காங் நிர்வாகம் தொடர்பான சட்டத்தை இயற்றுவதற்கும் திரும்பப் பெறுவதற்குமான அதிகாரம் ஹாங்காங் சட்டமன்றத்துக்குதான் இருக்கிறது என்பதே இதுவரையிலான ஏற்பாடு. ‘ஒரே நாடு, இரண்டு அமைப்புகள்’ என்று இதைத்தான் இதுவரை பெருமையாகச் சொல்லிவந்தது சீனா. இப்போது தன் வாக்குறுதியை அதுவே குலைக்கிறது.

சென்ற ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டங்களுக்கு அந்நிய சக்திகள்தான் காரணம் என்று தற்போது குற்றம்சாட்டும் சீனா, இதுவே பிரிவினைவாதப் போக்குகளை அடக்குவதற்குப் புதிய சட்டம் கொண்டுவருவதற்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது என்று வாதிடுகிறது. இந்த நகர்வு எப்போது மேற்கொள்ளப்படுகிறது என்பதே சீனாவின் உள்நோக்கங்களை உணர்த்திவிடுகிறது.

ஹாங்காங்கின் சட்டமன்றத் தேர்தல் செப்டம்பரில் நடைபெறவிருக்கிறது. மொத்தமுள்ள 70 இடங்களில் பாதியளவு மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன; ஏனைய இடங்கள் நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. எனினும், அடிப்படைச் சட்டத்தில் எந்தத் திருத்தத்தையும் மேற்கொள்ள மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவை. சென்ற ஆண்டு நவம்பரில் நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தல்களில் ஹாங்காங் ஜனநாயக ஆதரவு முகாம் 390/452 இடங்களில் வென்ற பிறகு, சீன ஆதரவு முகாம் ஆடிப்போய் இருக்கிறது. விளைவாகவே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய சட்டங்கள் மூலம் ஹாங்காங் மீதான தன் பிடியை இறுக்க முனைகிறது சீன அரசு. ஜனநாயகத்தை இறுக்க முற்படுவதானது நெடுங்கால நோக்கில் எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும். ஹாங்காங்கில் தனக்கு எதிரான சிந்தனையைத் தானே வளர்க்கிறது சீனா.

SCROLL FOR NEXT