தலையங்கம்

ஆபாசத்தைத் தடுக்கும் வழி!

செய்திப்பிரிவு

ஆபாச இணையதளங்களை யாரும் பார்க்க முடியாமல் தடுக்க உத்தரவிட்ட மத்திய அரசு, அதற்குப் பலத்த எதிர்ப்பு எழவே தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்பதில் அரசுக்கு ஏற்பட்ட குழப்பமும், இதை எப்படி அமல்படுத்த முடியும் என்ற தொழில்நுட்பப் பிரச்சினையும்தான் முடிவை மாற்றிக்கொள்ளக் காரணங்களாக இருக்கின்றன.

இந்தியாவில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் பின்னணியில் இணையதளங்களுக்கு உள்ள தொடர்பை எவராலும் மறுக்க இயலாது. 2012-ல் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, கொடூரமாகக் கொன்றவர்கள் உட்படப் பலரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணைகள் ஆபாச இணையதளங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைச் சொல்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி, இந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கமலேஷ் வாஸ்வானி ஏப்ரல் 2013-ல் வழக்குத் தொடுத்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் பதில் நடவடிக்கை என்ன என்று கேட்டதைத் தொடர்ந்தே ஆபாச இணையதளங்களை முடக்க அரசு உத்தரவிட்டது. அது தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதாகும் என்று பலத்த எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இப்போது தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறது.

இப்போதைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் எதை ஒன்றையும் பார்க்காமலும் கேட்காமலும் படிக்க முடியாமலும் தடுப்பது எளிதல்ல. ஒன்றைத் தடை செய்யும்போதுதான் அதைப் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல், அதைப் பற்றிக் கேள்விப்படாமல் இருந்தவர்களுக்குக்கூட அது என்ன என்று பார்க்கும் ஆவல் மேலிடுகிறது. வீட்டிலிருக்கும் கணினித் திரையில்தான் என்றில்லை; மடிக்கணினிகளிலும் கையடக்க செல்பேசிகளிலும்கூட இவற்றையெல்லாம் பார்க்கக் கூடிய அளவுக்குத் தொழில்நுட்பம் விரிவடைந்துவிட்டது. மாணவர்கள் தங்களுடைய கல்விக்காகவே இச்சாதனங்களைக் கையாள்வதும் அதிகரித்துவிட்டது. ஆகவே, இதையெல்லாம் தடைசெய்யும் முயற்சி என்பது ஒவ்வொருவர் கணினிக்கும் பூட்டு போடும் முயற்சிக்கு ஒப்பானது; தோல்வியில்தான் போய் முடியும். மாறாக, ஒரு பன்னோக்குத் திட்டத்துக்கு அரசு தயாராக வேண்டும்.

ஆபாசமான புகைப்படங்களையோ, கதைகளையோ, கருத்துகளையோ விநியோகிக்கக் கூடாது என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 292-வது பிரிவு ஏற்கெனவே தடைசெய்கிறது. மின்னணுச் சாதனங்கள் மூலம் ஆபாசமான படங்களையோ, கருத்துகளையோ பரப்பக் கூடாது என்று தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67-வது பிரிவும் தடைசெய்கிறது. பாலியல் குற்றங்களில் சிறார்களை எந்த வகையிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பதற்கும் தனிச் சட்டமே இருக்கிறது. அப்படிப்பட்ட சம்பவங்களையோ, காட்சிகளையோ படம்பிடித்து மற்றவர்களுக்குக் காட்டுவது அதைவிடப் பெரிய குற்றமாகத் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆகையால், சிறுவர்களையும் பெண்களையும் ஆபாசமாகக் காட்டுவது என்பது சட்டப்படி பெருங்குற்றம். இவ்வளவு சட்டங்கள் இருக்கும்போதும் நம்மூரில் ஆபாசம் பொங்கி வழியக் காரணங்கள் என்ன? முக்கியமானது, சட்டங்கள் நம்மூரில் சட்டப் புத்தகங்களுக்குள்ளேயே தூங்குகின்றன.

ஒருபுறம் பள்ளிகளில் தொடங்கி பாலியல் கல்வி, இன்னொருபுறம் தொழில்நுட்பரீதியிலான சல்லடைகள், மற்றொருபுறம் சட்டரீதியிலான கடும் நடவடிக்கைகள்… இப்படி ஒரு பன்னோக்குத் திட்டத்துக்கு அரசு தயாராக வேண்டும். முக்கியமாக, இந்த ஆபாசங்கள் யார் மூலம் உருவாகின்றனவோ அவர்கள் மீது அரசு கை வைக்க வேண்டும், கடுமையாக. கல்வியும் தொழில்நுட்பமும் சட்டங்களும் இணையும்போதுதான் இது சாத்தியமாகும்!

SCROLL FOR NEXT