அரசிடம் உச்ச நீதிமன்றம் ஒரு கேள்வி / சந்தேகத்தை எழுப்புகிறது என்றால், அதன் பின்னணியில் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் தேசம் செல்ல வேண்டிய பாதையோடு தொடர்புடைய சமிக்ஞைகள் அதில் இருக்கக் கூடும் என்பதை யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.
தேசிய அடையாள அட்டையான ‘ஆதார்’பயன்பாடு தொடர்பான வழக்கில், “அந்தரங்கம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை இல்லை” என்று உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறார் மத்திய அரசின் தலைமை அரசு வழக்கறிஞரான முகுல் ரோஹட்கி. 1962 கரக் சிங் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “அந்தரங்கம் என்பது அரசியல் சட்டம் அளிக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, பணிசெய்யும் உரிமைபோல அடிப்படை உரிமையல்ல” என்று கூறியிருப்பதை ரோஹட்கி சுட்டிக்காட்டியிருக்கிறார். இது உண்மையாக இருக்கலாம். ஆனால், அடுத்தடுத்து பல வழக்குகளில் குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாகவே உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துவந்திருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்திடம் ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று அரசு மீண்டும் மீண்டும் தெரிவித்தாலும், அரசின் பல்வேறு உதவிகளை / மானியங்களைப் பெற நடைமுறையில் அது இருந்தால்தான் வேலை நடக்கும் என்ற சூழலை உருவாக்கிவிட்டது அரசு. “இதுவரை ஆதார் அட்டைக்காக ரூ. 5,000 கோடி செலவிடப்பட்டிருக்கிறது; 80 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை பெற்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அதைக் கைவிட முடியாது” என்ற அரசின் வாதமே ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும் காலம் தொலைவில் இல்லை என்பதை உணர்வதற்குப் போதுமானது. பிரச்சினை என்னவென்றால், ஆதார் அட்டைக்காக கை ரேகை, கண் வடிவம் தொடங்கி மக்களின் அத்தனை விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அந்தத் தரவுகள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படும் என்ற கேள்விக்கு அரசிடம் உறுதியான பதில்கள் இல்லை.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையில், அவரவர் அந்தரங்கத்தைப் பிறர் அறியாத வண்ணம் காத்துக்கொள்ளும் உரிமையும் சேர்ந்தேதான் இருக்கிறது. வெகுசமீபத்தில்கூட 2012-ல், மத்திய திட்டக் குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் நியமித்த நிபுணர் குழு அளித்த அந்தரங்கம் தொடர்பான சட்ட வரைவுக்கான பரிந்துரை, தனிநபர் அந்தரங்கத்துக்கு அரசு கொடுக்க வேண்டிய பாதுகாப்பைச் சுட்டிக்காட்டுகிறது. “தரவுகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது, அனுமதியில்லாமல் இடைமறித்துக் கேட்பதிலிருந்து பாதுகாப்பது, வேவு பார்ப்பதிலிருந்து காப்பது, உடல்ரீதியான அந்தரங்கத்தைக் காப்பது போன்ற கடமைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று அது சொல்கிறது.
வாக்காளர் அடையாள அட்டைக் கணக்கெடுப்பு, குடிமைப்பொருள் வழங்குவதற்கான பொதுவிநியோக அட்டைக் கணக்கெடுப்பு, வருமான வரி செலுத்த நிரந்தர எண் அளிப்பதற்கான தகவல் அளிப்பு என்று, அரசு கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அளிப்பது, அரசு கேட்கிறது என்பதாலும் அரசுக்கு இத்தரவுகள் தேவைப்படுகின்றன என்பதாலும்தான்.
எனவே, தன்னுடைய தேவைகளுக்காகத் தகவல்களைத் திரட்டும் அரசு, அந்தத் தகவல்கள் கசியாமலும் திருடப்படாமலும் பாதுகாக்க வேண்டிய முக்கியக் கடமையையும் நிறைவேற்ற வேண்டிய அவசியக் கடமை இருக்கிறது. அதை விடுத்து, ‘அந்தரங்க உரிமையா, அது உனக்குக் கிடையவே கிடையாதே?’ என்று சொன்னால், அதை எப்படி எடுத்துக்கொள்வது?