தலையங்கம்

ஊரடங்கைத் தளர்த்துதல்: அத்தியாவசியப் பட்டியலைத் தமிழக அரசு விஸ்தரிக்கட்டும்

செய்திப்பிரிவு

கரோனாவை எதிர்கொள்ளும் விதமான ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலேயே அதைப் பகுதியளவில் தளர்த்தும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்தது இந்திய அரசு. மக்களின் உயிரும் காக்கப்பட வேண்டும்; அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும் என்ற இரட்டை நிர்ப்பந்தங்கள் எல்லா அரசுகளையுமே இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் அழுத்துகின்றன. அதற்கு வீட்டில் இருக்கும் மக்களுக்கு நிதி உதவி அளிப்பதுதான் தீர்வே தவிர, ஊரடங்கு அமலில் இருக்கும்போதே சமூகத்தின் ஒரு பகுதியினரைத் திறந்துவிடுவது அல்ல. ஒன்றிய அரசு சறுக்கும் இந்த இடத்தில் பல மாநில அரசுகள் சரியான முடிவை எடுத்திருக்கின்றன. டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், தெலங்கானா, மஹாராஷ்டிரம், குஜராத் ஆகியவற்றைத் தொடர்ந்து, ‘மே 3 வரை ஊரடங்கில் எந்தத் தளர்வும் இல்லை’ என்று தமிழ்நாடு அரசும் முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

டெல்லி போதுமான நிதியை ஒதுக்கீடு செய்திடாத நிலையிலும், தமிழக அரசு அடித்தட்டு மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அளித்தல், நிதி வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதில் நன்றாகப் பணியாற்றிவருகிறது. இந்த ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்; அதற்கேற்ப டெல்லியிடமிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர வேண்டிய தொகை கேட்டுப் பெறப்பட வேண்டும். கரோனா தொற்றால் தமிழக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பெரும் தொகையிலானவர்கள் குணமடைந்து திரும்பும் போக்கு நல்லது. இதற்காக உழைக்கும் ஒவ்வொருவருக்கும் நம்முடைய பாராட்டும் நன்றியும் உரித்தாகுகின்றன.

தமிழ்நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவது நாம் திட்டமிடுவதைத் தாண்டியும்கூட நீளலாம் என்பதையே அன்றாடம் வெளியாகும் கிருமித் தொற்று எண்ணிக்கை சுட்டுகிறது. இத்தகு சூழலில் மக்கள் துயருறாத வகையில் ஊரடங்கு அமைவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது முழுமையான திறப்பு என்ற இரு உச்ச முடிவுகளுக்கு நடுவில் தமிழக அரசு சிந்திப்பது அவசியம். அதாவது, அத்தியாவசியச் சேவைகளின் பட்டியல் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறபடி, ஒரு வாகனம் இயங்க வேண்டும் என்றால், பெட்ரோல் நிலையங்கள் மட்டும் அல்ல; சக்கரங்களுக்குக் காற்று நிரப்புமிடமும், பழுது நீக்கும் நிலையங்களும்கூட அதற்குத் தேவை. சரக்குப் போக்குவரத்து, கூரியர் சேவை, கழிவுநீர் மேலாண்மை, இணைய சேவை என்று இன்றைய சமூக இயக்கத்தின் மிக முக்கியமான கண்ணிகள் அத்தனையையும் இணைத்து, அவை செயல்பட தமிழக அரசு அனுமதிப்பது முக்கியம். மேலும், படிப்படியாக நாம் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான சிந்தனையும் நமக்கு வேண்டும்.

SCROLL FOR NEXT