தலையங்கம்

தேர்கள் எரிபடும் தேசம்

செய்திப்பிரிவு

ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளுக்கு மத்தியில், சமத்துவத்தின்மீது நம்பிக்கைகொண்டிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்தச் செய்தி. விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் தேர் எரிக்கப்பட்ட சம்பவமும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்தவர்களின் குடிசைகள் எரித்துச் சேதப்படுத்தப்பட்ட சம்பவமும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. சாதியம் நாளுக்கு நாள் நம் மண்ணில் எவ்வளவு கூர்தீட்டிக்கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது, நாம் பேசும் எல்லா வார்த்தைகளும் அர்த்தமிழக்கின்றன.

சின்னப் பொறி ஏற்பட்டாலும் பற்றியெரியும் அளவுக்குத் தமிழகத்தின் பல கிராமங்களில் சாதி ஆதிக்கமும் பகைமையும் ஒளிந்திருக்கின்றன. சேஷசமுத்திரம் தேரை எரித்தழித்த தீ அங்கிருந்தே உருவாகியிருக்கிறது.

சேஷசமுத்திரம் தேர்த் திருவிழாவை நடத்த முயற்சித்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். அக்கிராமத்தில் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையாக இருப்பவர்கள். பல்லாண்டு காலமாகத் தாங்கள் வழிபட்ட மாரியம்மனுக்கு, 2012-ல் தேர்த் திருவிழா நடத்த அவர்கள் முயன்ற போது தொடங்கியிருக்கிறது பிரச்சினை. பொதுச்சாலை வழியாகத் தேர் வரக் கூடாது என்று கூறி, ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களை அடுத்து தேர்த் திருவிழா நடக்கவில்லை. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றன. இதற்கிடையே இந்த ஆண்டு தேர்த் திருவிழா நடத்த தலித் மக்கள் முடிவெடுத்திருக்கின்றனர். இந்த முறையும் ஏனைய சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இருதரப்பினரிடையேயான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத சூழலில்தான் தேர் மீது பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார்கள் சில சாதிய வெறியர்கள்.

தேரோட்டத்துக்காகக் கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தேர் இந்தத் தாக்குதலில் உருக்குலைந்தது. இதேபோல, அப்பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இதில் வீடுகள் தீக்கிரையாகியிருக்கின்றன. இந்த வன்முறையைத் தடுக்க முயன்ற போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஊருக்குள் மேலும் போலீஸார் நுழைவதைத் தடுத்து நிறுத்திய ஊர் மக்கள், அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 8 போலீஸாரும் வருவாய்த் துறையைச் சேர்ந்த சிலரும் காயமடைந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 84 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்பு அவசரச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகளுக்காக ஒட்டுமொத்த சமூகமுமே வெட்கித் தலைகுனிய வேண்டும். குறிப்பாக, சமூகத்தின் பயணத்தை முன்னின்று வழிநடத்தும் அரசியல் கட்சிகள். துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் மவுனம் அல்லது அவை தரும் உற்சாகத்திலிருந்தே இச்சம்பவங்களின் பின்னணியில் உள்ள தீயசக்திகள் உத்வேகம் பெறுகின்றன. தனி மனிதர்கள் சாதியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளாதவரை இதற்கெல்லாம் விமோசனமே இல்லை. ஆனால், அதுவரைக்கும் அரசு இப்படியான சமூகக் கிருமிகளையெல்லாம் சகித்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. சேஷசமுத்திரம் சம்பவத்தில் தொடர்புடைய கடைசி மனிதர்கூட விடுபடக் கூடாது. இரும்புக்கரத்தின் வலிமையை அரசு அவர்களுக்கு உணர்த்த வேண்டும்!

SCROLL FOR NEXT