தலையங்கம்

கரோனா கண்காணிப்புக் குழு: தமிழக அரசின் நல்ல முடிவு

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டை 12 மண்டலங்களாகப் பிரித்து, மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க மண்டலவாரியாக, சிறப்புப் பணிக் குழுக்களை அமைத்திருக்கும் மாநில அரசின் முடிவு ஆக்கபூர்வமானது.

மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட இந்தச் சிறப்புப் பணிக் குழுக்களில் முன்னதாக வெவ்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களும், பிறகு அரசால் பாரபட்சக் கண்ணோட்டத்துடன் அணுகப்பட்டவர்களுமான டி.உதயசந்திரன், டி.எஸ்.அன்பு, எம்.எஸ்.சண்முகம் போன்ற அதிகாரிகளின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் களத்தில் மாவட்ட ஆட்சியர்களும் திட்டமிடுவதில் முக்கியத் துறைகளின் செயலர்களும் தற்போது பங்கெடுத்தாலும், பணியனுபவம் நிறைந்த மூத்த அதிகாரிகளின் திறன்களையும் அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. அதைப் போலவே, அதிகாரிகள் தொடர்பில் சார்புக் கண்ணோட்டங்களைத் தவிர்க்க வேண்டிய நேரமும்கூட. தேவையெனும்பட்சத்தில், ஓய்வுபெற்ற திறன்மிக்க சில அதிகாரிகளையும்கூட இப்போது பணிக்குத் திரும்ப அழைக்கலாம்.

தமிழ்நாட்டை மண்டலங்களாகப் பிரித்துப் பார்ப்பது எவ்வளவு ஆக்கபூர்வமானதோ, அப்படி மாவட்டங்களையும் சிறு அலகுகளாகப் பிரித்து நிர்வகிப்பது தொடர்பிலும்கூட நம்முடைய அரசு சிந்திக்க வேண்டும். நோய்ப் பரவல் அதிக அளவில் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட மாவட்டங்களை மேலும் சிறு அலகுகளாகப் பிரித்து அவற்றுக்குத் தனி அதிகாரிகளை நியமிப்பது பற்றியும்கூட யோசிக்கலாம். மாநில அளவில் நோய்த் தடுப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், ஒவ்வொரு மாவட்டத்தின் தன்மையையும் அதன் தேவைகளையும் அறிந்து அதற்கேற்ப முடிவெடுப்பதே இத்தகு சூழலில் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். ராஜஸ்தானின் தொழில் நகரமான பில்வாராவில் 27 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களில் இருவர் இறந்த நிலையிலும், அந்த மாவட்டத்தின் ஆட்சியர் எடுத்த சிறப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கிருமிப் பரவல் தடுக்கப்பட்டு, இரு வாரங்களுக்குப் புதிய தொற்று ஏதும் கண்டறியப்படாத சூழல் அங்கு உருவாக்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த ஊரடங்குச் சூழலிலிருந்து மீண்டும் நாம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றால், ஒவ்வொரு கிராமம், நகரம், வட்டம், மாவட்டம் என்று கிருமியிலிருந்து விடுபட்ட பிராந்தியங்களாக விரிந்தே நாடு அந்நிலையை அடைய முடியும். அதற்கு இப்படிச் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்படுகிற ஒவ்வொரு நிர்வாக அமைப்புக்கும் கள நிலவரங்களுக்கேற்ப முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பகிர வேண்டும். மேலிருந்து கீழும், கீழிருந்து மேலுமாக யோசனைகளும் செயல்பாடுகளும் பயணிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT