பிஹாரின் முஷாகர்தோலா கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் பட்டினியால் இறந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தினக்கூலித் தொழிலாளியான அந்தச் சிறுவனின் தந்தை வேலை இன்றி வீட்டில் முடங்கியதே சிறுவனின் மரணத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ‘சிறுவன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான், அதனால் இறந்தான்’ என்கிறது அரசு. அப்படியே இருந்தாலும்கூட, குடும்பத்தின் பட்டினிச் சூழல் சிறுவனின் மரணத்தை விரைவுபடுத்தியே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட லட்சக்கணக்கான ஏழைகளுக்கு உணவளிப்பது இப்போது நம் முன்னுள்ள பெரும் சவால்.
சாதாரண நாட்களிலேயே உலகப் பட்டினிக் குறியீட்டு அறிக்கையின்படி, உலக நாடுகளில் 102-வது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. தினக்கூலியாக ஏதோ ஒரு வேலையைச் செய்ய வாய்ப்பிருக்கும் சாதாரண நாட்களிலேயே இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை 36.3 கோடி. ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்பிருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் மேலும் பல கோடிப் பேர் இரவில் வெறும் வயிற்றோடு உறங்கச் செல்வார்கள். வெறுமனே சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் தங்கி வாழ்வோர் மட்டுமல்லாது, தங்களுக்கென்று ஒரு வீட்டில் இருப்பவர்களும்கூட உணவுக்காக அல்லற்படும் நிலையை இன்றைய சூழல் உருவாக்கியிருக்கிறது.
அரசு அறிவித்திருக்கும் நிதியுதவிகளும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களும் மட்டுமே அவர்களின் பட்டினியைத் தீர்த்துவிடாது. ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட வறியவர்களோடு இந்தப் புதிய ஏழைகளுக்கும் சேர்த்து உடனடியாக உதவ வேண்டியது பெரும் பொறுப்பு என்பதால், இதில் உள்ளூர் தன்னார்வலர்க் குழுக்களை உரிய முன்னேற்பாடுகளோடு இணைத்துக்கொள்வதே ஆக்கபூர்வமான முடிவாக இருக்க முடியும். உணவகங்களையும் அங்கிருந்து உணவுப் பொட்டலங்களை வீடுகளுக்குக் கொண்டுசேர்க்கும் இணையச் சேவைகளையும் அனுமதிக்கும் அரசானது தன்னார்வலர்களை உணவுப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுத்த ஏன் தயங்க வேண்டும்?
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கரோனா சிகிச்சைக்கான மருத்துவக் குழுக்களிலேயே தன்னார்வலர்களை ஈடுபடுத்திவருகிறார்கள். கேரளம், கோவா இரு மாநிலங்களும் இங்கே தன்னார்வலர்களை நிவாரணப் பணிகளில் அனுமதிக்கின்றன. இதற்கு முன் இயற்கைப் பேரிடர்க் காலங்களில் பணியாற்றிய குழுக்களைத் தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இந்தியா முழுமைக்கும் இந்த யோசனை விரிவுபடுத்தப்பட வேண்டும்.