தலையங்கம்

மேலும் வலுப்படட்டும் ஈரானுடனான உறவு!

செய்திப்பிரிவு

ஈரானுடனான உறவை மேலும் நெருக்கமாக்கிக்கொண்டிருக்கிறது இந்தியா. விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலிலிருந்து இப்போது ஈரானை நீக்கிவிட்டது இந்திய அரசு. அந்நாட்டுடனான தனது உறவுக்குப் புதிய வலிமையை ஊட்ட இந்நடவடிக்கையை எடுத்திருப்பது வரவேற்புக்குரியது.

ஈரானியர்கள் இந்தியா வருவதற்கான தடைகளை விலக்குவதன் மூலம், இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். ஈரானின் அணு நிலையங்களைச் சர்வதேச ஆய்வுக் குழு பார்வையிடுவதில் உடன்பாடு ஏற்பட்டது முதலே இந்திய அரசு ஈரானுடனான உறவைச் சுமுகமாக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.

இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் முன்பு ஈரான் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், மேற்கத்திய நாடுகள் தந்த நெருக்குதல் காரணமாக சர்வதேச அணுசக்தி முகமைக் கூட்டத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதன் தொடர்ச்சியாக ஈரான் கச்சா எண்ணெய்க் கொள்முதலும் குறைந்தது. இப்போது மேற்குலகமே ஈரானுடன் நெருங்கிவிட்ட சூழலில், இந்தியாவுக்கு இருந்த நிர்ப்பந்தங்களும் நீங்கிவிட்டன.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க கடந்த பிப்ரவரியில் ஈரானியத் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றார். இதன் தொடர்ச்சியாக, தெஹ்ரானுக்கு வர வேண்டும் என்று ஈரான் விடுத்த அழைப்பைப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டார் என்று இந்தியாவில் உள்ள ஈரானுக்கான தூதர் குலாம்ரெசா அன்சாரி தெரிவித்திருக்கிறார். இந்திய - ஈரான் உறவு நெருக்கமாவது பொருளாதார, ராணுவ நோக்கில் பல விதங்களில் உதவக் கூடியது.

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்கு லாபகரமானது. முதல் காரணம், அது இந்தியாவுக்கு அருகில் இருக்கிறது. அடுத்தது, நீண்ட காலக் கடனில்கூட எண்ணெய் வழங்கத் தயாராக இருக்கிறது. அத்துடன் ஈரானில் நிலவாயு இருப்பு அதிகம். உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்து நிலவாயுவை விற்க ஈரான் தயாராகிவருகிறது. ஈரானில் உள்ள ‘ஃபர்சாட்-பி’எண்ணெய் வயலில் முதலீடு செய்ய இந்திய எண்ணெய், இயற்கை வாயு கார்ப்பரேஷன் ஆர்வமாக இருக்கிறது.

இந்தியாவின் சில மின்உற்பத்தி நிலையங்கள் நிலவாயுவைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. இப்போது நிலவாயு கிடைப்பது போதாததால் அவை உற்பத்தி செய்யாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஈரானிடம் நிலவாயுவை அதிகம் பெற்று அவற்றை மீண்டும் இயக்க முடியும். ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை மேம்படுத்த இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. அதை நிறைவேற்ற முடிந்தால் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து ஈரானுக்கு எளிதில் கப்பல்கள் போய்வர முடியும். அந்தத் துறைமுகமானது இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானுடன் தொடர்புகொள்ள எளிதான மாற்று கடல்வழியாக அமையும்.

பாகிஸ்தானைத் தாண்டி நம்மால் ஆப்கனுடன் போக்குவரத்துத் தொடர்பை வைத்துக்கொள்ள முடியும். முக்கியமாக, ஆப்கனின் அமைதி நம் இரு நாடுகளுக்குமே அவசியமானது. அதற்கு, ஆப்கனில் அமைதியாக மக்களாட்சி நடக்கவும் தலிபான்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்கவும் ஈரான் - இந்தியா இடையே நெருக்கமான உறவு அவசியமானது. இப்படி எவ்வளவோ காரணங்களைப் பட்டியலிடலாம்.

எல்லாவற்றுக்கும் மேலான நியாயம் ஒன்று உண்டு. ராஜாங்க உறவில் இந்தியா தன் பழைய இடத்தை நோக்கித் திரும்புவதே எல்லோர்க்கும் நல்லது!

SCROLL FOR NEXT