தலையங்கம்

கரோனா தடுப்பு நடவடிக்கை: தீவிரத்தோடு கனிவையும் காட்ட வேண்டும் அரசு!

செய்திப்பிரிவு

கரோனாவுக்கு எதிராகப் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கும், அதற்குக் கிடைத்திருக்கும் வெற்றியும் இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க நிகழ்வு. உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா சற்று தாமதமாகக் களம் இறங்கினாலும், இந்தியாவின் 135 கோடி மக்களுக்கும் கரோனா தொடர்பான விழிப்புணர்வை ஒருசேர இந்த ஊரடங்கு கொண்டுசேர்த்திருக்கிறது. மக்களிடம் வெளிப்பட்ட ஒற்றுமையும் ஈடுபாடும் மெச்சத்தக்கது. இந்த ஒரு நாள் ஊரடங்கோடு, பல மாநிலங்கள் அடுத்தடுத்த கறார் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன. கரோனாவுக்கு எதிரான செயல்பாட்டில் தமிழக அரசு தன்னை முன்வரிசையில் இறக்கிக்கொண்டிருப்பது நல்ல விஷயம். எனினும், கறார்த்தன்மையோடு கனிவும் கலந்து எடுக்க வேண்டியவை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பதை அவசியம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளை மூடவும், அத்தியாவசியமான பொருட்கள் விற்பனை தவிர மற்ற கடைகள் அனைத்தையும் மூடவும், தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே அலுவலகப் பணிகளைச் செய்யவும், வீடற்றோருக்கு உணவு ஏற்பாடுகள் கிடைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஒருசில நாட்கள் முன்பு வரை ‘தமிழகத்தில் கரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்’ என்று சட்டமன்றக் கூட்டத் தொடரைக்கூட ரத்துசெய்யாமல் அறிவித்தபடி இருந்துவிட்டு, உடனடி அறிவிப்பு வெளியிடுவதும், மக்கள் பாதுகாப்பான வகையில் ஊர் திரும்புவதற்கு ஒரு நாள் அவகாசம் மட்டுமே அளிப்பதும் போதவே போதாது.

ஊரடங்கு போன்ற ஒரு முடிவை அரசு எடுக்கும்போது எல்லாத் துறைகளோடும் கலந்தாலோசிப்பதும், ஒருமித்த முடிவுகளை எடுப்பதும் முக்கியமானது. ஊரடங்கை அறிவிக்கும் ஓர் அரசு எப்படிப் பொதுத் தேர்வை நடத்த முடியும்? ஒரு வாரத்துக்கும் மேலாக மேல்நிலைப் பள்ளிப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்ய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். மத்தியக் கல்வி வாரியம் முன்னரே தேர்வுகளை ரத்துசெய்துவிட்ட நிலையில் மாநிலக் கல்வி வாரியம் நேற்று இரவுதான் தேர்வுகளை ரத்துசெய்வதாக அறிவித்தது. இது ஒரு உதாரணம்தான். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தில் வந்து தங்கி வேலைசெய்யும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கிருந்து வெளியேறுவதற்கான எந்த முன்னேற்பாடும் இன்றி மாநிலம் இப்படி ஊரடங்குக்குச் செல்வதையும் இன்னோர் உதாரணமாகச் சொல்லலாம். ஒரு இக்கட்டான காலகட்டத்தில் அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம்.

சென்னையை அணுகும் முறையிலிருந்தே இந்த விவகாரத்தை எப்படித் திறம்படக் கையாள்வது என்று தமிழக அரசு யோசிக்கலாம். நகர்மயமாக்கல் சூழலில் நம்முடைய பெரும்பாலான நகரங்கள் அந்தந்த நகரங்களுக்கு வெளியிலிருந்து வருபவர்களைக் கணிசமாகக் கொண்டிருக்கின்றன. இத்தகு கொள்ளைநோய் அச்சுறுத்தல் காலகட்டத்தில் ஜனநெருக்கடி மிக்க நம்முடைய நகரங்கள் வெடிகுண்டுகளைப் போல மாறிவிடுகின்றன. கரோனா தாக்குதலின் மையங்களான சீனாவின் வூஹான், இத்தாலியின் மிலன் நகரங்களின் பெரும் துயரம் அவற்றின் ஜனநெருக்கடி என்பதும், அந்த நகரங்களைக் காட்டிலும் பத்து மடங்கு ஜனநெருக்கடி மிகுந்தது சென்னை என்ற புரிதலும் அரசுக்கு வேண்டும்.

எல்லா நாடுகளுமே பல மாதங்கள் வரைகூட நீடிக்கவல்ல பெரும் பிரச்சினையாகவே கரோனா தாக்குதலைப் பார்க்கின்றன. இப்படியான நோய் அபாயத் தருணங்களில், வழக்கத்தைக் காட்டிலும் நம் வீடுகளில் கூடுதலாகத் தண்ணீரை உபயோகிப்பார்கள். சென்னையின் நீர்த் தேவை அடுத்தடுத்த மாதங்களில் இரு மடங்காக அதிகரித்தால் அதை எதிர்கொள்ள அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது? சீனாவோ இத்தாலியோ நகரங்களை மூடுகின்றன என்றால், அவற்றால் தம் மக்களுக்கு உணவு முதற்கொண்டு வழங்க முடிகிறது. நம்முடைய நகரங்களில் குடிநீருக்கே பெரும் பகுதி அரசும் மக்களும் தனியாரை நம்பியிருக்க வேண்டிய சூழல். குடிநீருக்கு முதற்கொண்டு அடுத்தவர் கைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ள சென்னையை உரிய திட்டமிடல், மக்களுக்கான அவகாசம் இல்லாமல் மூடுவது பெரும் இடருக்கு வழிவகுக்கும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் சேவைகளோடு 30,120 சிறப்பு பஸ் சேவைகளும் இயக்கப்பட்டதைத் தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். இப்போது ரயில்கள் இயக்கப்படாத சூழலில், கூடுதல் பஸ் சேவைகளுக்கான தேவை இருக்கிறது. இத்தகு நிலையில், எப்படி ஒரே நாளில் மக்கள் ஊர் சென்றடைய முடியும்? நெரிசலின்றி சென்னையின் மக்கள் அடர்த்தி குறைய அனுமதிப்பதும், மேலும் சில நாட்களுக்கு அவகாசத்தை நீடிப்பதும், பின்னர் நகரத்தை மூடுவதுமே பாதுகாப்பு.

நம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பல விஷயங்களிலும் மக்களுக்கு அரசுதான் விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாததாகிறது. அடுத்தடுத்த மாதங்களுக்குத் தயாராகிறோம் என்ற பெயரில் பலரும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வீடுகளில் குவிப்பது, நாட்டில் தேவையற்ற செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், வீட்டில் தேவையற்ற நுகர்வையும் வியாதிகளையும் உருவாக்க வழிவகுக்கும். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க சுயவிலக்கம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தெடுப்பதும் முக்கியம். வீட்டில் இருக்கும் நாட்களில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை அளவாக எடுத்துக்கொள்வதன் அவசியம், நுரையீரலின் சிறப்பான செயல்பாட்டுக்கு மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதலின் முக்கியத்துவம் இவற்றையெல்லாமும் அரசுதான் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். ஒரு பெரிய போருக்குத் தயாராவது போன்றதுதான் இது; ஆனால், முறையாகத் திட்டமிட்டால் பெரிய சேதமின்றி நிச்சயமாக நம்மால் இந்தப் போரில் வெற்றி காண முடியும்.

SCROLL FOR NEXT