தலையங்கம்

அரசியலிலிருந்து குற்றவாளிகளை விலக்குவது யார் கையில் இருக்கிறது?

செய்திப்பிரிவு

குற்றப் பின்னணி உள்ளவர்கள் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்க நீதித் துறை, தேர்தல் ஆணையம், சமூகக் குழுக்கள் ஆகியவை கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து முயன்றுவருகின்றன. ஆனால், தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, வழக்குகளைச் சந்திப்பவர்களைக்கூட வேட்பாளர்களாகத் தொடர்ந்து தேர்வுசெய்து ஆதரிக்கின்றன. எனினும், குற்றவாளிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சட்டமியற்ற எந்த அரசும் தயாராக இல்லை.

வேட்பாளர்கள் தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகிய விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டும் என்ற சீர்திருத்தம்கூட எதிர்பார்த்தபடி பலன் தரவில்லை. கடந்த நான்கு பொதுத் தேர்தல்களாகக் குற்றப் பின்னணி உள்ளவர்கள் வேட்பாளர்களாவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ‘வெற்றிபெறும் வாய்ப்புள்ளவர்' என்றால், அவருடைய குற்றப் பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் கவலைப்படுவதில்லை. எனவே இந்த முறை, கட்சிகளிடமே சீர்திருத்த முயற்சியைத் தொடங்கிவிட்டது உச்ச நீதிமன்றம். வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது அவர்களுடைய கல்வி உள்ளிட்ட தகுதிகள், சாதனைகள், நன்னடத்தை போன்றவை எந்த அளவுக்குக் கணக்கில் கொள்ளப்படுகின்றன என்று தேசிய, மாநில அரசியல் கட்சிகளைக் கேட்டிருக்கிறது நீதிமன்றம். வேட்பாளர்களுக்கு எதிராக உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களை அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட வேண்டும்; இந்த விவரங்களை மாநில மொழி நாளிதழிலும், தேசிய நாளிதழிலும் வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். குற்றப் பின்னணி குறித்து இதுவரை வேட்பாளர்கள் மட்டும் தங்களுடைய வேட்புமனுவில் தெரிவிப்பது கட்டாயமாக இருக்கிறது.

சட்டமன்றங்களுக்கோ நாடாளுமன்றத்துக்கோ தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எதிரான வழக்கில், அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால் அவருடைய பதவி உடனே பறிக்கப்படுவதற்கும் நீதிமன்றம்தான் நடவடிக்கை எடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படவும் நடவடிக்கை எடுத்தது. இவ்வளவு செய்தும் குற்றப் பின்னணி உள்ளவர்களை விலக்க முடியவில்லை என்பதால்தான் இப்போது அரசியல் கட்சிகளே அந்தத் தகவல்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையம் இதை வரவேற்றுள்ளது.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை நீதிமன்றங்களால் மட்டும் தடுத்துவிட முடியாது; அரசியல் கட்சிகளும் இப்பணிக்கு முன்வர வேண்டும். குற்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே போட்டியிடக் கூடாது என்று சட்டமியற்றலாம். இதைவிட எளிதான வழி, எல்லா கட்சிகளும் தாங்களாகவே பார்த்து குற்ற வழக்கில் சிக்கியவர்களை வேட்பாளர்களாகத் தேர்வுசெய்யாமல் விட்டுவிடலாம். ஊழல் செய்தவர்தான், குற்றப் பின்னணி உள்ளவர்தான் என்று தெரிந்தும்கூட, ஏதோ ஒரு காரணத்துக்காக அப்படிப்பட்டவர்களைக்கூட வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பதும் துரதிர்ஷ்டவசமானதே! அரசியல் கட்சிகள், நீதித் துறை, தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் என்று அனைவரும் கூடிச் செயல்பட்டால்தான் குற்றப் பின்னணி உள்ளவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த முடியும்!

SCROLL FOR NEXT