தலையங்கம்

காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவித்திடல் வேண்டும்

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் இன்னும் விடுதலை செய்யப்படாத நிலையில், அவர்கள் மீது பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது அரசு. இதே பிரிவின் கீழ் மற்றொரு முன்னாள் முதல்வரான பாரூக் அப்துல்லா மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். மாநிலத்தில் மொத்தம் எத்தனை பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மத்திய அரசு அடுத்து என்ன செய்யப்போகிறது என்பது பற்றியெல்லாம் தெளிவாக எதுவும் தெரியவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் பயன்படுத்தப்பட்ட அதிகாரத்தின் அதே கூறுகள் நாட்டின் பிற பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டபூர்வமான அரசியல் எதிர்ப்புகளைக்கூட பலம் கொண்டு ஒடுக்குவது, அரசை விமர்சிக்கும் தலைவர்களை இந்திய விரோதிகள் என்று சித்தரிப்பது, காவல் துறையின் அத்துமீறிய செயல்களைக் கண்டிக்காமல் அதைப் போற்றிப் புகழ்வது ஆகியவை தொடர்கின்றன. மனம்போன போக்கிலும் காலவரம்பின்றியும் அரசியல் தலைவர்களைக் கைதுசெய்வதையும் காவலில் வைப்பதையும் அவசியமான நடவடிக்கைகள் என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடியோ, ‘ஏற்க முடியாத’ கருத்துகளை காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் தெரிவித்ததாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

ஆட்சியில் இருப்பவர்கள் ஏற்கும்படியான கருத்துகளைத்தான் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேச வேண்டும் என்று வரையறுப்பதும், அப்படி ஏற்க முடியாத கருத்துகளைப் பேசினால் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுப்பதும், சட்டப்படி ஆட்சி நடைபெற வேண்டிய ஜனநாயக முறைக்குப் பெரிய ஆபத்தாகிவிடும். ஜம்மு-காஷ்மீரில் காலவரம்பின்றி இணையதள சேவையை முடக்கி வைப்பது சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் அரசைக் கடிந்துகொண்டது. அதற்குப் பிறகு, இணையதள சேவை பகுதியளவு மட்டுமே வழங்கப்பட்டது. குடிமக்களுடைய பேச்சு சுதந்திரத்தை அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்வதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அடிக்கடியும் பரவலாகவும் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்படுவதையும் கண்டித்தது. இந்த விவகாரங்கள் தொடர்பாகக் குரலை உயர்த்திய உச்ச நீதிமன்றம், அரசைக் கட்டுப்படுத்த எதையும் செய்யவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அரசமைப்புச் சட்டத்தின் கூறு 370-ன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதையும் அதை நடைமுறைப்படுத்திய விதத்தையும் பரிசீலனைக்கு ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், அவற்றை உடனே விசாரித்து ஆணையிட வேண்டும் என்றும் நினைக்கவில்லை.

இப்போதாவது ஜம்மு-காஷ்மீர் தொடர்பாகத் தீவிரமான அரசியல் ஆலோசனைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும். காஷ்மீர் அரசியல் கட்சிகளிடம் குறைகள் இருந்தாலும் அந்தப் பகுதியில் முழு அமைதியை நிலைநாட்டவும் இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்தவும் அங்குள்ள தலைவர்களாலேயே எளிதில் முடியும். அவர்களைத் தொடர்ந்து காவலிலேயே வைத்திருப்பதும், அவர்கள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுப்பதும் எவ்வகையிலும் நியாயமானது அல்ல; உடனடியாக விடுவிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT