அமெரிக்க செனட் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் தோல்வி அடைந்ததால் ஆபத்தின்றி அதிபர் பதவியில் தொடர்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்க அரசியல், கட்சிரீதியாகப் பிளவுபட்டிருப்பதை மட்டுமல்ல; முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே உள்ள பிளவுகளையும் இது வெளிக்கொண்டுவந்திருக்கிறது. தனக்கு எதிரான தீர்மானம் தோற்றுவிட்ட பிறகு, தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார் ட்ரம்ப். ஆனால், அதில் உண்மை இல்லை.
அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு எதிராகப் போட்டியிட வாய்ப்புள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேனுக்குக் களங்கத்தை ஏற்படுத்தத் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்த முயன்றார் ட்ரம்ப். ஜோ பிடேனின் மகன் ஹண்டர் பிடேன், உக்ரைன் நாட்டில் வணிகத்தில் ஈடுபட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் நாட்டு அதிபரை ட்ரம்ப் கேட்டுக்கொண்டார்; அவர் தயங்கியபோது, அந்த நாட்டுக்கான நிதியுதவியை உடனடியாக வழங்காமல் தாமதப்படுத்தினார் ட்ரம்ப். இது அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரிக்க ட்ரம்ப் ஒத்துழைக்கவில்லை. நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் குலைக்க முயன்றார் என்பது ட்ரம்ப் மீதான இன்னொரு குற்றச்சாட்டு.
பதவியில் இருக்கும் அதிபரை நீக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். ட்ரம்ப் உறுப்பினராக உள்ள குடியரசுக் கட்சி பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் தீர்மானம் வெற்றி பெறாது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். குடியரசுக் கட்சி முழுதாக அவரை ஆதரித்தது; அந்தக் கட்சியின் மிட் ரோம்னி மட்டும் ட்ரம்ப் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளில் ஒன்றை ஆதரித்து, ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து வாக்களித்தார். இந்தத் தீர்மானம் மூலம் ட்ரம்ப்பைப் பதவிநீக்கம் செய்ய முடியாது என்று தெரிந்தும், அதிபர் செய்தது குற்றமே என்று நாடறியச் செய்வதற்குத்தான் இந்த முயற்சியில் இறங்கியதாக ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பதில் அளிக்கின்றனர். இந்த விசாரணையும் பதவிநீக்கத் தீர்மானமும் ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்த்தபடி ட்ரம்ப்பின் புகழைக் குலைத்துவிடவில்லை. அடுத்த தேர்தலில் அதிபராகப் போட்டியிட அவருக்கு ஆதரவு பெருகியிருக்கிறது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 43.5% முதல் 49% வரையிலான அமெரிக்கர்கள் ட்ரம்ப்பை ஆதரித்துள்ளனர். அவர் அதிபரானது முதல் இதுவரை இந்த அளவுக்கு அவரை அமெரிக்கர்கள் ஆதரித்ததில்லை. அதேவேளையில், தார்மீக அடிப்படையில் பதவி விலகல் தீர்மானத்தைக் கொண்டுவந்த ஜனநாயகக் கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க வாக்காளர்கள் முக்கியப் பிரச்சினைகளாகக் கருதுபவை மீது அக்கறை செலுத்தி, ஒற்றுமையாக இருந்து வெளிப்படையாகச் செயல்பட்டு, அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால்தான் வெற்றி பெற முடியும்.