இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கிறார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 இடங்கள் கிடைத்துள்ளன. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில், 196 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 29 உறுப்பினர்கள் அவரவர் கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் வீதப்படி கட்சித் தலைமையால் நியமிக்கப்படுகின்றனர். வடக்கில் உள்ள மூன்று மாகாணங்களிலும் தமிழ் தேசியக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மைச் சமூகத்தவர்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைக்க முடியும். தமிழ் தேசியக் கூட்டணிக்கு 16 இடங்கள் கிடைத்துள்ளன. இடதுசாரி சிங்களக் கட்சியான ஜனதா விமுக்த பெரமுன 6 தொகுதிகளில் வென்றுள்ளது.
இந்தத் தேர்தல் சில செய்திகளை இலங்கை அரசியல் கட்சிகளுக்குத் தெளிவாகச் சொல்கிறது.
1. தேர்தல் முடிவுகள் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பதைவிடவும், இதை ராஜபக்சவுக்குக் கிடைத்த தோல்வியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. ராஜபக்சவின் சர்வாதிகாரப் போக்கையும் பேரினவாதச் செயல்பாடுகளையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியையும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவையும் பிரச்சாரத்தின்போது கடுமையாகத் தாக்கிப் பேசிய மகிந்த ராஜபக்ச, மீண்டும் அரசியலில் தலையெடுக்க முயன்ற முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் மீண்டும் திரும்ப வருவார்கள் என்றுகூட சிங்கள வாக்காளர்களுக்கு அவர் மிரட்டல் விடுத்துப் பார்த்தார். அவருடைய மறுவருகையை மக்கள் விரும்பவில்லை என்பதோடு, இன அடிப்படையில் மோதல்கள் தொடர்வதையும் மக்கள் விரும்பவில்லை என்பதையும் உணர்த்தியிருக்கிறார்கள்.
2. அரசியல் சட்ட ஆணையத்தை ஏற்படுத்தியது, அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த சுயஅதிகாரம் படைத்த அமைப்புக்களை உருவாக்கியது போன்ற நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
3. அதிபர் பதவியில் ஒருவர் சேர்ந்தார்போல இரண்டு முறைக்கு மேல் இருக்கக் கூடாது என்ற அரசியல் சட்ட ஏற்பாட்டுக்கும் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதிபர் ஆட்சி முறையிலிருந்து நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாறுவோம் என்று மைத்ரிபாலவும் ரணிலும் கூறியதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். முக்கியமாக, நல்லாட்சியை அவர்கள் எதிர்பார்ப்பதை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கை அதிபரும் பிரதமரும் முன்பு அரசியல் கணக்குகளுக்குக் கோத்த கைகளை இனி நல்லாட்சிக்கான செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து மக்களுக்கும் சமஉரிமை, போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுத்தல், நாட்டின் அனைத்துச் சமூகங்களையும் சமச்சீர் வளர்ச்சியை நோக்கி நகர்த்துதல் என்று ஆக்கபூர்வப் பணிகளை நோக்கிச் செல்ல வேண்டும். மாகாண அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், நாட்டின் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு அளிக்கப்பட வேண்டும், தங்களுடைய நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று சிறுபான்மைச் சமுதாயத்தினர் கோருவதைப் புதிய அரசு ஏற்று நடத்த வேண்டும். ராணுவச் செலவுகளைக் குறைத்து வர்த்தகம், சுற்றுலா, மீனளம் என எல்லாத் துறைகளிலும் முதலீட்டைப் பெருக்க வேண்டும். நாட்டை வளப்படுத்த வேண்டும்!