தலையங்கம்

உச்ச நீதிமன்றத்துக்கு ஏன் இந்தத் தயக்கம்?

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் முதல் அமலில் இருந்த அடிப்படை உரிமைகள் முடக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் மிகவும் பாராட்டுக்குரியவை. உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டக் கூறுகளுக்கு விளக்கம் தருவதோடு, நீதி வழங்கவும் வேண்டும். மக்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி உரிமைகள் நசுக்கப்பட்டிருந்தால் அதை மீட்டுத்தர வேண்டும். அரசின் செயல்கள் செல்லுமா, செல்லாதா என்று உச்ச நீதிமன்றம் கூறாமல் விட்டிருப்பது ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.

மக்கள் தங்களுடைய உணர்வுகளைத் தெரிவிக்க முடியாமல், குறைகளைச் சொல்ல முடியாமல், ஜனநாயகம் தங்களுக்கு அளித்திருக்கும் உரிமைகளைப் பயன்படுத்த முடியாமல் தடுப்பதற்குக் குற்றவியல் தடைச்சட்டத்தின் 144-வது பிரிவை அரசு பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது இப்போதைய காலத்துக்கு மிகவும் பொருத்தமானது. ஏனென்றால் மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரிவை அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளை அடக்க அடிக்கடி பயன்படுத்துகின்றன. ‘இதுவரை பிறப்பித்த தடைகளையும் விதித்த கட்டுப்பாடுகளையும் பரிசீலியுங்கள்’ என்று அரசுக்கு அறிவுறுத்தியதைத் தவிர உச்ச நீதிமன்றம் வேறு எதையும் செய்யவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் முக்கியமான அம்சங்கள் உள்ளன. இணையதளப் பயன்பாடும், பேச்சு சுதந்திரத்தைப் போன்ற அடிப்படை உரிமைதான் என்பது இதில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இணையதளம் தொழில், வர்த்தகத் துறையினரின் அன்றாட நிர்வாகத்துக்கு இப்போது அவசியமாகிவிட்டதையும் உணர்த்துகிறது. அடுத்ததாக, இணையதள முடக்கமாகட்டும், 144 தடைச் சட்டமாகட்டும் சமூகத்தில் அரசுக்கு எதிராக எழும் போராட்டங்களின் தன்மை, தீவிரத்துக்குப் பொருத்தமான வகையில் இருக்க வேண்டுமே தவிர, லேசான எதிர்ப்புகளுக்குக்கூட - அல்லது எதிர்ப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பில்கூட - இத்தகைய தடைச் சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என்று அரசுக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எதிர்ப்புக்கு ஏற்ப நடவடிக்கை என்பதை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது.

எல்லாவற்றையும்விட முக்கியம், அரசின் எந்த உத்தரவும் ரகசியமானதாக இருக்கக் கூடாது என்று இந்த வழக்கில் கூறப்பட்டிருப்பதுதான். ஒரு மாநிலத்தில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அரசு உத்தரவுகளைப் பிறப்பித்தால், அவை அனைத்தும் சேகரித்து பிறகு வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றை எதிர்த்து மக்கள் வழக்கு தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கருத்து. அரசின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவை செல்லாது என்று உத்தரவிடத் தவறிவிட்டது. ஒவ்வொரு தடை அல்லது கட்டுப்பாட்டுக்கும் காரணமான அம்சங்களையும் அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறும் உச்ச நீதிமன்றம், அப்படிக் கூற முடியாத நிலையில் அந்த உத்தரவுகள் செல்லாது என்றும் அறிவித்திருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT