நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வியப்பளிக்கும்படியான அம்சம் ஏதும் இல்லை என்பதுதான் வியப்பு. பொதுவாக, ஆளுங்கட்சியே உள்ளாட்சியைப் பெருவாரியாகக் கைப்பற்றும் போக்குக்கு மாறாகப் பிரதான எதிர்க்கட்சியான திமுக அதிகமான இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது; அதேசமயம், கிட்டத்தட்ட அதற்கு இணையான இடங்களை ஆளும் அதிமுக கைப்பற்றியிருப்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் இரு தரப்புக்கும் இது சமமான வெற்றி என்றே கூற வேண்டியிருக்கிறது.
அக்டோபர் 2016-ல் நடந்திருக்க வேண்டிய தேர்தல் மிகத் தாமதமாக நடந்தது மோசம். அதுவும், மாநிலத்தின் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 27-ல் மட்டுமே தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது; மொத்தமாகவே, நகர்ப்புறங்களில் தேர்தல் இனிதான் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. எனினும், கிட்டத்தட்ட 2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ள இத்தேர்தலின் முடிவுகளை மாநிலத்தின் மனநிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். மக்களவைப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி 39-ல் 38 தொகுதிகளை வென்றது. அடுத்து நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வென்றது. 2021-ல் சற்று கடுமையாக முயன்றால் ‘ஆட்சி நமதே’ என்று இரு கட்சிகளும் முண்டா தட்டுவதற்கான வாய்ப்பை இப்போதைய முடிவுகள் தந்திருப்பதாகச் சொல்லலாம். ஆக, இரு கட்சிகளுக்குமே இது ஊக்கம்.
ஏனைய கட்சிகள் பெரிய ஆதரவைப் பெறவில்லை என்றாலும், சில போக்குகள் புலப்படுகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதும், திமுக கூட்டணியில் விசிக ஒப்பிடத்தக்க வெற்றிகளைப் பெறாததும் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேபோல, கூட்டணி பலத்தில் குறிப்பிடத்தக்க இடங்களை பாஜக வென்றிருப்பதும், பாரம்பரியமான தன்னுடைய களங்களிலேயே மார்க்சிஸ்ட் கட்சி கரைந்திருப்பதும் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் துடைத்தெறியப்பட்ட அமமுக சில வெற்றிகள் மூலம் மீண்டும் கவனம் ஈர்க்கிறது. ஊரகப் பகுதிகளில் மக்களுடைய எண்ணம் எப்படி இருக்கிறது என்பதைத் தாண்டி, கட்சி அமைப்பு எப்படியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள இவையெல்லாம் உதவுகின்றன.
பறக்கும் படை, சென்னையிலிருந்தே கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவைக் கண்காணிப்பது போன்றவை மூலம் மாநிலத் தேர்தல் ஆணையம் புதிய முன்னெடுப்புகளைச் சாத்தியப்படுத்தியிருந்தது கவனம் ஈர்த்தது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் அடுத்தகட்டமாக இதேபோலத் தேர்தலை நடத்த வேண்டும். புதிதாகப் பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்கள் உட்பட எஞ்சிய 9 மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மூன்று மாதங்களுக்குள் நடத்திமுடித்து அங்கும் உள்ளாட்சித் தேர்தல்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். தேர்தல் நடைமுறைகள் நியாயமாகவும் நம்பத்தக்கதாகவும் இருப்பதைத் தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். அடுத்தகட்டத் தேர்தலை விரைந்து முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு மாநில அரசு உதவ வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி இரண்டுக்குமே அவப்பெயரைத்தான் தேடித்தரும்.