புதுடெல்லியில் ஞாயிறு அன்று நாட்டின் முன்னணிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நிகழ்த்திய கொடூரத்தைக் கண்டு நாடே உறைந்துபோனது. அந்தக் கும்பல் மாணவர் விடுதிகளைச் சூறையாடியது; மாணவர்களையும் பேராசிரியர்களையும் பணியாளர்களையும் மூர்க்கமாகத் தாக்கிக் காயப்படுத்தியது. இவற்றையெல்லாமே பல மணி நேரம் சாவதானமாகச் செய்து முடித்தது.
அரசு நிர்வாகத் தலைமையகங்களாலும், அரசியல் தலைவர்கள் செயல்பாட்டாளர்களாலும், ஊடகங்களாலும் நிரம்பி வழியும் நாட்டின் தலைநகரத்தில் இதை ஒரு ரௌடி கும்பலால் இவ்வளவு நிதானமாகச் செய்ய முடிகிறது என்றால், அது வெட்கக்கேடு இல்லையா? அரசு நிர்வாகம் என்று ஒன்று அந்த நேரத்தில் இருந்ததா என்று கேள்வி எழுப்பப்படுவதில் தவறு ஏதும் தெரியவில்லை.
ஏனென்றால், வளாகத்தின் வெளியே காவல் துறையினர் நின்றிருந்தனர்; தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர்கூட காவல் துறையினரால் கைதுசெய்யப்படவில்லை. தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன; கோஷம் போட்டு நிதானமாக வெளியேறிய கும்பலுக்குப் பாதுகாப்பு அளிப்பதுபோல் காவல் துறையினர் நின்றிருந்தனர்.
ரௌடிகளால் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை முன்கூட்டிச் சொல்பவர்களாகவே இருக்கின்றனர். ஒரு ஜனநாயகமாகவும் தனது நிறுவனங்களைப் போற்றிப் பாதுகாக்கக்கூடிய சமூகமாகவும் முதிர்ச்சி அடைவது குறித்து, இந்தியா காணும் கனவுகளில் எல்லாம் அந்த ஒரு இரவானது இனி துரத்தும்; நாட்டின் மனசாட்சியை இனிவரும் காலமெல்லாம் அது உறுத்திக்கொண்டே இருக்கும்.
இந்தக் கொடூரத் தாக்குதல்களை நிகழ்த்தியவர்களின் முகங்களை அடையாளம் காண்பது ஒன்றும் சிரமமல்ல. ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுதந்திர மனப்போக்கும் எதையும் கேள்வி கேட்கும் உத்வேகமும் நீண்ட காலமாக ஒரு அரசியல் செயல்திட்டத்தால் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டுவந்தன. பன்மைத்துவத்துக்கும் சுதந்திர மனப்பான்மைக்கும் தாராளத்தன்மைக்கும் பேர் போன நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று தாக்கப்பட்டதானது, அந்த அரசியல் செயல்திட்டம் மேலும் மேலும் கூர்மைப்பட்டுக்கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது.
இவ்வளவு மோசமான ஒரு விஷயத்தைக்கூட பல்கலைக்கழகத்தின் இடதுசாரி வலதுசாரி மாணவர்கள் இடையேயான வழக்கமான கருத்து மோதலின் ஒரு பகுதியாக விவாதங்களில் இதைப் பேச முற்படுபவர்கள், காலித்தனத்தை நியாயப்படுத்த வழி தேடுகிறார்கள் என்பதைத் தவிர, அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை.
முன்பின் தெரியாத இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்றிருக்கும் பின்னணி விளையாட்டு யாருக்கும் புரியாதது அல்ல; இந்த வன்முறையை முன்னெடுத்தது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்புதான் என்ற பரவலான குற்றச்சாட்டு தீவிரமான விசாரணைக்கும் அதன் அடிப்படையிலான நடவடிக்கைக்கும் உரியது என்பதுபோக, முதல்கட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகவே பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ஜகதீஷ்குமார், டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகமும் அதன் துணைவேந்தரான எம்.ஜகதீஷ்குமாரும் ஆசிரியர்களாகவும் பாதுகாவலர்களாகவும் தங்கள் கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள். அமுல்யா பட்நாயக்கின் தலைமையின் கீழ் இருக்கும் டெல்லி காவல் துறையானது ஏற்கெனவே ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களைக் கையாண்ட விதத்தில் பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டதை இங்கே நினைவுகூர வேண்டும்.
காவல் துறையினர் இங்கே முகமூடிகள் இல்லாமல் இருந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் பெயர்ப் பட்டைகளை அணியாமல் இருந்ததன் மூலம், தங்களின் அடையாளத்தை மறைத்திருப்பதானது நடந்த சம்பவத்தின் பின்கதைகளைப் பட்டவர்த்தனப்படுத்துவதாகவே இருக்கிறது.
அரசு இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும்; ஆனால், குறைந்தபட்சம் மேற்கண்ட இருவர் மீதான நடவடிக்கைகளின் வழியாகத்தான் அரசு இந்த விஷயத்தில் தனக்கான தார்மிகத்தையும் விசாரணையின் மீதான நம்பகத்தன்மையையும் மக்களிடம் கோர முடியும்.