தலையங்கம்

ஆந்திர முதல்வரின் தலைநகர முடிவு சரியானதுதானா?

செய்திப்பிரிவு

ஆந்திர முதல்வராகப் பதவியேற்றது முதலாக ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துவரும் பல முடிவுகள் அரசியல் சார்ந்து வேறு சில கணக்குகளைக் கொண்டிருந்தாலும், அதிகாரப் பகிர்வில் அவருக்கு நம்பிக்கை இருப்பதை வெளிக்காட்டுவனவாகவும் அவை இருக்கின்றன. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஐந்து சகாக்களை ஆந்திரத்தின் துணை முதல்வர்களாக நியமித்ததுபோலவே ஆந்திரத்துக்கு மூன்று தலைநகரங்கள் என்ற அவரது சமீபத்திய முடிவையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தன்னுடைய முடிவை நியாயப்படுத்தும் விதமாக, “தென்னாப்பிரிக்க நாட்டுக்கு மூன்று தலைநகரங்கள் இருப்பதைப் போல ஆந்திரத்திலும் விசாகப்பட்டினம், அமராவதி, கர்நூல் ஆகிய மூன்று நகரங்களைத் தலைநகரமாக மாற்ற விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திரம் இயல்பாகவே இப்படியான முடிவை எடுத்திருக்க வேண்டும். 2014-ல் உள்துறை அமைச்சகம் நியமித்த கே.சி.சிவராமகிருஷ்ணன் குழு ஆந்திரத்தின் மேல் பகுதி, மத்தியப் பகுதி, கீழ்ப் பகுதி மூன்றுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் மூன்று நகரங்களில் முறையே தலைமைச் செயலகம், சட்டமன்றம், நீதித் துறை ஆகியவற்றை நிறுவலாம் என்றே பரிந்துரைத்தது. ஆந்திர அரசு நிறுவிய ஜி.என்.ராவ் குழுவும், ‘அமராவதியில் ஆந்திரச் சட்டமன்றத்தையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகத்தையும், கர்நூலில் உயர் நீதிமன்றத்தையும் நிறுவலாம்’ என்றே பரிந்துரைத்தது. ஆனாலும், தெலுங்கு தேசம் அரசு அமராவதியில் மாநிலத் தலைமையகத்தைக் கட்டுவது என்று முடிவெடுத்தது. இதைத் தன்னுடைய கனவு நகர உருவாக்கம்போல மேற்கொண்டார் அன்றைய முதல்வர் சந்திரபாபு நாயுடு. தொடர்ந்து, தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் ஹைதராபாதிலிருந்து 2016-ல் அமராவதிக்கு மாற்றப்பட்டன. 2019 முதல் உயர் நீதிமன்றமும் அமராவதியிலிருந்தே செயல்படத் தொடங்கியது. அமராவதியிலேயே இன்னமும் வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட வேண்டியிருக்கின்றன. அமராவதி நிர்மாணத்துக்காக சிறப்பு அந்தஸ்தும் நிதியுதவியும் மத்திய அரசிடம் கேட்கப்பட்டதும், கோரிக்கை நிறைவேறாத சூழலில் பாஜக கூட்டணியிலிருந்தே தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியதும் எல்லோர் நினைவிலும் நிற்கும்.

இப்போதைய முதல்வரின் முடிவு அடிப்படையில் அதிகாரப் பகிர்வுக்கும், ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதால் ஏற்படும் தொல்லைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்றாலும், ஏராளமான நிதி ஏற்கெனவே செலவிடப்பட்ட அமராவதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் விடுவது எந்த அளவுக்கு ஆக்கபூர்வ முடிவாக இருக்கும் என்ற கேள்வி இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கெனவே நிதி நெருக்கடியை மாநிலம் எதிர்கொள்ளும் நிலையில் புதிய அறிவிப்பு மேலும் எவ்வளவு நிதியைக் கேட்கும் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. இத்தகு சூழலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது முடிவை மறுபரிசீலனை செய்வதுதான் நல்லதாகத் தோன்றுகிறது அல்லது மூன்று தலைநகரங்கள் விஷயத்தில் உடனடி நடவடிக்கைகளில் இறங்காமல் அமராவதி கட்டுமான மிச்ச வேலைகளை முடித்துவிட்டுப் படிப்படியாக அடுத்தடுத்த தலைநகர உருவாக்க வேலைகளில் இறங்கும் வகையிலான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

SCROLL FOR NEXT