தலையங்கம்

ட்ரம்ப் பதவிநீக்கத் தீர்மானம்: விவாதங்கள் தொடங்கட்டும்!

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் டொனால்ட் ட்ரம்ப், பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது அதிபர் என்று இடம்பிடித்திருக்கிறார். அதிபரின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுத்ததற்காகவும் இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது கடந்த வாரத்தில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலாவது பிரிவு, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஜோ பிடேனின் குடும்பத்துடனான வர்த்தக உடன்பாடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலென்ஸ்கியிடம் ட்ரம்ப் கூறியது தொடர்பானது. அதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் 391 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவ உதவியை நிறுத்திவைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. இது, உள்நாட்டு ஜனநாயக அரசியலில் எதிரியைக் களங்கப்படுத்துவதற்கு வெளிநாட்டுச் சக்திகளை நாடும் முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது. 230 பேரின் ஆதரவோடும், 197 பேரின் எதிர்ப்போடும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பதவிநீக்கத் தீர்மானத்தின் இரண்டாவது பிரிவு, ட்ரம்ப் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டார் என்ற குற்றச்சாட்டை அமெரிக்க நாடாளுமன்றம் விசாரிக்க முற்பட்டபோது அதைத் தடுத்தார் என்பது. விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூடாது என்று சாட்சிகளுக்கு அவர் நிர்ப்பந்தம் கொடுத்தது, அழைப்பாணைகளை அலட்சியப்படுத்துமாறு அரசு அமைப்புகளைக் கேட்டுக்கொண்டது ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த இரண்டாவது பிரிவு, 229 பேரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்த்து வாக்களித்தோர் 198 பேர்.

தற்போது, இந்த விஷயம் செனட் சபையின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அங்கு மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்கள், அதாவது 67 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே ட்ரம்பைப் பதவியிலிருந்து நீக்க முடியும். ஆனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 53 பேர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 45 பேர் என்று செனட் சபையே இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது. சுயேச்சை உறுப்பினர்கள் இரண்டு பேரும் ஜனநாயகக் கட்சியுடன் இருக்கிறார்கள் என்றபோதும், பதவிநீக்கத் தீர்மானம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், தார்மீகரீதியாக ட்ரம்ப் வீழ்ந்துவிட்டார்.

அமெரிக்கக் கூட்டாட்சி முறையில் நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளைப் பற்றி கவலைகள் உருவாகிவரும் நிலையில் நேரெதிராக நிற்கும் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான உறவில் இந்தப் பதவிநீக்கத் தீர்மானம் ஆழ்ந்த விரிசலை உருவாக்கிவிட்டது. இந்தப் பகைமை தொடருமானால், அடுத்த ஆண்டில் வரவிருக்கும் தேர்தலின்போது பதற்றம் அதிகரிக்கும். அதை நீக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அது குடியுரிமை, வர்த்தகம், பருவநிலை மாற்றம், ஆயுதக் கட்டுப்பாடு, இனவாதம், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையேயான எதிரெதிர்க் கருத்துகள் தொடர்பாக மீண்டும் விவாதங்களைத் தொடங்குவதுதான். சில சங்கடங்கள் நேரக்கூடும் என்றாலும், இந்த மாற்றுவழி மட்டுமே உலகின் பழமையான மக்களாட்சிகளில் ஒன்றான அமெரிக்காவின் அரசியல் தவறுகளை மன்னித்தருளக்கூடியதாக இருக்கும்.

SCROLL FOR NEXT