பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த, ராணுவத் தளபதியாக இருந்து ஆட்சியைக் கைபற்றி, சர்வாதிகாரியாக உருவெடுத்து, கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் பாகிஸ்தானை இயக்குபவராக இருந்த பர்வேஸ் முஷாரபுக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பதில் ஆச்சரியமே இல்லை; பாகிஸ்தானைத் தாண்டியும் ஜனநாயக அரசைக் கூரிய விழிகளோடு பார்க்கும் ராணுவத் தலைமைகளுக்கான எச்சரிக்கை இந்தத் தீர்ப்பு.
பாகிஸ்தானின் ராணுவத் தலைமைப் பொறுப்பில் இருந்த முஷாரப் 1999-ல் பெரிய களேபரங்கள் இல்லாத ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினார்; 2008-ல் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பின் அதிபர் பதவியிலிருந்து அவர் விலகும் முன் சர்வாதிகாரிகள் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முற்படும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். 2007-ல் பாகிஸ்தானில் அவர் அறிவித்த நெருக்கடிநிலையும் அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இவற்றில் உச்சம் தொட்டன. தனக்கு எதிரான பிரம்மாண்டமான போராட்டங்களை ஒடுக்க நெருக்கடிநிலையை அறிவித்தவர், மக்களுடைய ஜனநாயகரீதியான உரிமைகளை ரத்துசெய்ததோடு, தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பெரும் வேட்டையையும் நடத்தினார். எனினும், இவையெல்லாம் அவரது ஆட்சியை நிரந்தரமாக்கிவிடவில்லை. மிக விரைவில் அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.
தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசமைப்பைச் செயலிழக்க வைத்து, தேசத்தை இருட்டில் தள்ளிய முஷாரப் மீது நவாஸ் ஷெரீஃப் ஆட்சிக் காலகட்டத்தில் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. 2013 தொடங்கி முஷாரபைத் துரத்திவந்த இந்த வழக்கில்தான் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முஷாரபின் குற்றத்தை உறுதிசெய்ததோடு அவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையையும் அளித்திருக்கிறது. தன் ஆட்சிக் காலகட்டத்துக்குப் பின் வெளிநாடுகளில் வசித்துவரும் முஷாரப் தற்போது துபையில் இருக்கிறார். முதுமையும் நோய்மையும் துரத்துவதான பாவனையில் விசாரணைக்காக பாகிஸ்தான் செல்வதையும் தவிர்த்தே வந்தவர் சர்வதேசத் தொடர்புகள் வழி தனக்கு எதிரான வழக்கில் தீர்வு தேட முயன்றுவந்தார். தற்போது ஆட்சியில் இருக்கும் இம்ரான் கான் அரசு இதற்கான அழுத்தங்களைச் சந்தித்ததோடு, நீதித் துறையில் இந்த வழக்கை மேலும் இழுத்தடிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. எல்லாவற்றையும் கடந்தே இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது பாகிஸ்தான் நீதிமன்றம்.
முஷாரப் மேல்முறையீடுகளுக்குச் செல்லலாம். அங்கே என்னவாகும், மரண தண்டனை என்பது வரவேற்கத்தக்கதா என்பதையெல்லாம் தாண்டி இத்தீர்ப்பின் மிக முக்கியமான அம்சம், பாகிஸ்தான் நீதித் துறையின் துணிச்சல் - ஜனநாயக மாண்பில் அது எடுத்துக்கொண்டிருக்கும் அக்கறை. பாகிஸ்தானின் ஒரு ராணுவ ஆட்சியாளராக இருந்தவர் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக்கப்பட்டு, மரண தண்டனையும் அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. வரலாற்றுரீதியாகவும் அமைப்புரீதியாகவும் பாகிஸ்தான் அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திவரும் ராணுவத்துக்கு இது பலத்த அடி. தற்போதைய ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு அளிக்கப்பட்ட விவகாரத்திலும் சமீபத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தலையிட்டதும், பணிக் காலத்தை ஆறு மாதங்களாகக் குறைத்து, அதற்கும் மேல் அவர் பணியில் நீடிக்க வேண்டும் என்றால், இதுதொடர்பில் புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக 30 ஆண்டுகள் ராணுவத்தாலேயே ஆளப்பட்ட ஒரு நாட்டில் ஜனநாயக நலன்களுக்காக பாகிஸ்தான் நீதித் துறை எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. நாட்டின் குடிமை விவகாரங்களில் எந்தவிதமான ராணுவத் தலையீட்டுக்கும் எதிரான சட்டரீதியான தடையைத் தருவதாக இத்தீர்ப்பு அமைய வேண்டும். பாகிஸ்தானை முழுமையாக ஜனநாயகம் நோக்கித் திருப்புவதாகவும் இம்முயற்சி அமையட்டும்.