டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியில் பதிவுசெய்யப்படாத தொழிற்சாலைக் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சிறு தொழிலாக இருந்தாலும், நடுத்தரத் தொழிலாக இருந்தாலும் தொழிற்சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும், அப்படி அவை பின்பற்றுகின்றனவா என்பதைத் தொழிலாளர் நலத் துறை அவ்வப்போது சோதிக்க வேண்டும்; இந்த நடைமுறைகளெல்லாம் பின்பற்றப்படுவதே இல்லை என்பதற்கு மேலும் ஒரு அப்பட்டமான சாட்சியாகியிருக்கிறது இந்தக் கொடூர விபத்து.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிஹார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். குறைந்த ஊதியமே தரப்படுவதால் ஆலையிலேயே இரவு படுத்துறங்குபவர்கள். இரவானதும் வாயில் கதவுகளைப் பூட்டுவதுடன் மொட்டைமாடிக்கு எவரும் செல்லாதபடிக்கு அந்தக் கதவையும் பூட்டியுள்ளனர். இதனால், தீ விபத்து ஏற்பட்டபோது தப்பிக்க முடியாமலும், மூச்சுத் திணறலிலும்தான் பெரும்பாலானவர்கள் இறந்துள்ளனர். ஆலையின் மேலாளரும் கட்டிட உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்; டெல்லி அரசும் மத்திய அரசும் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடுகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு விபத்தின்போதும் அரசு மேற்கொள்ளும் இப்படியான நடவடிக்கைகளோடு இதை முடித்துவிடக் கூடாது.
கடந்த இருபதாண்டுகளில் டெல்லியில் அதிக உயிரைப் பலிவாங்கிய மூன்றாவது பெரிய தீ விபத்து இது. டெல்லியை நிர்வகிக்கத் தங்களுக்கு முழு அதிகாரம் தரப்படவில்லை, எதைச் செய்தாலும் மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் அகர்வால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி சட்டமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நெருங்குவதால், விபத்துக்கான பழியை டெல்லி அரசும் மத்திய அரசும் பரஸ்பரம் மற்றவர்கள் மீது சுமத்துகின்றன. பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பணியைச் செய்யாமல் இப்படி பழிபோட்டு தப்பிக்கப் பார்ப்பது இரு அரசுகளுக்குமே அழகல்ல.
டெல்லியில் மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்துவதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டும். எப்படிப்பட்ட உற்பத்திச் சாலைகளாக இருந்தாலும், உரிமையாளர்கள் தங்களுக்கே தெரியாமல்கூட சில நேரங்களில் ஆபத்துகளை ஆலை வளாகத்தில் அனுமதித்திருக்கக்கூடும். அதையெல்லாம் அடையாளம் காண வேண்டிய பொறுப்பை ஆலை பாதுகாப்பு நிபுணர்களிடமும், தீயணைப்புத் துறையினரிடமும் அரசு ஒப்படைக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவிறிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கட்டிடங்களுக்கு எப்படிப்பட்ட விதத்தில் அனுமதி வழங்கப்பட வேண்டும், அதன் அமலாக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் நாடு முழுவதற்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த இப்போதாவது முயல வேண்டும். பொது இடங்களில் உள்ள கட்டிடங்களைக் காப்பீடு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்டிடங்கள் வடிவமைக்கும்போதே பாதுகாப்பு அமைப்புகள் சரியாக இருப்பதைக் காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்தும்; கட்டிட உரிமையாளர்களும் அதில் கவனம் செலுத்துவார்கள். குடியிருப்புக் கட்டிடங்களிலிருந்து ஆரம்பித்து எல்லா இடங்களிலும் தீ விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை நீதிமன்றமும் தீயணைப்புத் துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் உறுதிப்படுத்தினால் மட்டுமே இந்த அவலங்களிலிருந்து விடுபட முடியும்.