தலையங்கம்

தொலைத்தகவல் தொடர்புத் துறை சிக்கல் தீர்க்கப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

தொலைத்தகவல் தொடர்புத் துறையின் மிகப் பெரிய நிறுவனங்களான ‘பாரதி ஏர்டெல்’, ‘வோடஃபோன் ஐடியா’ இரண்டும் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.73,000 கோடி வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளன. இதில் வோடஃபோன் பங்கு ரூ.50,922 கோடி, பாரதி ஏர்டெல்லின் பங்கு ரூ.22,830 கோடி.

மொத்த வருவாயின் கூட்டுத்தொகை எது என்பதில் கருத்தொற்றுமை ஏற்படாததால், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை இவ்விரு நிறுவனங்களும் செலுத்தவில்லை. அந்தத் தொகை மீது சேர்ந்த வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை அரசு கழிக்காவிட்டால் தங்களுடைய நிறுவனமே நொடித்துவிடும் என்று இரு நிறுவனங்களும் அரசிடம் முறையிட்டுள்ளன.

இப்போது அரசு உதவினால்தான் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்களால் மீள முடியும். ஆனால், இங்கே ஒரு கேள்வி எழுகிறது. அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை மீது அந்நிறுவனங்களுக்கு ஆட்சேபம் இருந்திருந்தாலும் அவ்வப்போது அதைச் செலுத்தியிருந்தால் நிதிப் பொறுப்பு குறைந்திருக்கும். வட்டி, அபராத வட்டி இவ்வளவு பெரும் சுமையாக மாறியிருக்காது.

அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் வேண்டுமென்றே நிலுவை வைத்ததுடன், தங்களுடைய வரவு-செலவிலும் அதற்கான நிதியை ஒதுக்காமல் விட்டது அவ்விரு நிறுவனங்களின் தவறு. அதற்காக அரசு ஏன் வட்டி, அபராத வட்டி ஆகியவற்றைத் தள்ளுபடி செய்து உதவ வேண்டும் என்பது ரிலையன்ஸ் ஜியோ சுட்டிக்காட்டும் விஷயம்.

இவ்விரு நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும் தொழிலில் அவை நீடிப்பதற்கான வழியைக் காணவும் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவ்பா தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. அதேசமயம், தொலைத்தொடர்புத் துறைக்கும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் ஈட்டும் வருவாயிலும் சுமார் 30% வரியாகவும் வேறு கட்டணங்களாகவும் அரசால் பெறப்படுகின்றன.

எனவே, அரசு தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிறுவனங்களின் வருவாயில் பங்கு பெற்றுக்கொள்ளும் அரசு, உரிமக் கட்டணமும் வசூலிக்கிறது. அலைக்கற்றை ஏலம் மூலமும் வருவாய் ஈட்டுகிறது. இந்தத் தொகை மிகவும் அதிகம்.

நிறுவனங்களின் லாபத்தை இது வெகுவாகக் குறைத்துவிடுகிறது என்பது பலரின் குற்றச்சாட்டு. இவைபோக, வெவ்வேறு நிறுவனங்களுக்கிடையிலான தொலைபேசி அழைப்புகளுக்கு அவை தங்களுக்குள் வசூலித்துக்கொள்ளும் தொகை தொடர்பாகவும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

தொலைத்தொடர்புத் துறை ஒழுங்காற்று அமைப்பு இதைப் பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறது. அரசின் ஒழுங்காற்றுக் கொள்கைகளும் அணுகுமுறையும் பாரபட்சமற்ற முறையில் இருக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் பணப் பரிமாற்றம் முழுவதும் டிஜிட்டலில் நடைபெறுவதற்கும் தொலைத்தொடர்புத் துறையின் பங்கு இன்றியமையாதது. எனவே, குறுகிய கால வருவாய் லாபத்துக்காக இத்துறையை அரசு முடக்கிவிடக் கூடாது. சேவையும் வளர வேண்டும், நிறுவனங்களும் தொடர வேண்டும்.

SCROLL FOR NEXT