பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.20, ரூ.30-க்கு விற்றுவந்த பெரிய வெங்காயம், தற்போது ரூ.60-லிருந்து ரூ.100 வரை விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளில் பெரிய வெங்காயமும் ஒன்று. தமிழ்நாட்டில் பெரிய வெங்காயம் விளைவதில்லை என்பதால் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டுச் சந்தைகளிலும் கடைகளிலும் விற்கப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் பல இடங்களிலும் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவுக்குக் கனமழை சமீபத்தில் பெய்திருப்பதால் பெரிய வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கூடவே, ஆந்திரம், கர்நாடகத்திலும் கன மழை பெய்திருக்கிறது. இதனால் பயிர்கள் அழுகிப்போனதோடு மட்டுமல்லாமல் அறுவடை செய்த பெரிய வெங்காயமும் பெருமளவு நாசமாகியிருக்கிறது. வழக்கமாக மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குத் தினமும் 80 லாரிகள் பெரிய வெங்காயம் வரும். தற்போது 40-லிருந்து 50 லாரிகள் வரைதான் கோயம்பேட்டுக்கு வருகின்றன என்கின்றனர் வணிகர்கள்.
கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்ட பெரிய வெங்காய விவசாயம் மீண்டுவர மூன்று மாதங்கள் ஆகும். ஆகவே, பொங்கல் வரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்நிலையில், கோயம்பேட்டில் கிலோ ரூ.60-க்கு விற்பனையானாலும் சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.90, ரூ.100 வரைகூட வெங்காயம் விற்கப்படுகிறது.
மேலும், விற்கப்படும் பெரிய வெங்காயமும் தரமாக இருப்பதில்லை. அழுகிப்போன வெங்காயத்தைத்தான் பல கடைகளிலும் காண நேரிடுகிறது. நிலைமை இப்படி இருக்க, அரசோ மெத்தனமாக இருக்கிறது.
‘பெரிய வெங்காயம் விலையால் மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்; அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே’ என்று கேள்வி கேட்டால், அவர்கள் எதிர்க்கட்சிகளை நோக்கி பதில் பாட்டுப் பாடுவதன் வாயிலாகப் பிரச்சினையை அரசியலாக்கிக் கடக்கவே முயல்கின்றனர். இப்படிப் பொறுப்பற்ற விதத்தில் பதிலளிப்பதற்குப் பதிலாக மாநில அரசு மத்திய அரசுடன் இணைந்து பிரச்சினையைத் தீர்க்கும் வழிகளைக் காண வேண்டும்.
பெரிய வெங்காயம் எங்கு அபரிமிதமாகக் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்து, அங்கிருந்து அதைக் கொண்டுவர அரசு முனைப்புக் காட்ட வேண்டும். இதுதான் சமயம் என்று லாபம் பார்க்க நினைக்கும் இடைத்தரகர்களை அரசு ஒழிக்க வேண்டும்.
காய்கறிகள் கெடாமல் இருக்கக் குளிரூட்டப்பட்ட கிடங்குகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இது பெரிய வெங்காயத்துக்கு மட்டுமல்ல, அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படும் மற்ற காய்கறிகளுக்கும் பொருந்தும். பெரிய வெங்காயம் விவகாரத்தில் அரசு உரிய காலத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டாலும் மக்களின் கோபத்துக்கு ஆளாகக்கூடும் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்.