தென்னமெரிக்க நாடான சீலே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 1 அன்று மெட்ரோ ரயில் கட்டணமும் பேருந்துக் கட்டணமும் உயர்த்தப்பட்டதை எதிர்த்து, சிறிய அளவில் தொடங்கிய போராட்டங்கள் நாடு முழுவதும் பரவின.
போராட்டமானது கட்டண உயர்வு என்பதில் தொடங்கி, அந்த நாட்டின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பெரும் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையில் வந்து நிற்கிறது. சீலேவின் தலைநகரான சாண்டியாகோவே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தீ வைப்புச் சம்பவங்கள் தொடர்கின்றன. தலைநகரிலும் வேறு நகரங்களிலும் நெருக்கடி நிலையை அந்த நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பின்யரா அறிவித்திருக்கிறார்.
சுமார் 6,000 போராட்டக்காரர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பல்வேறு போராட்டங்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். 2,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டங்களை ஒடுக்க காவல் துறையும் ராணுவமும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. போராட்டக்காரர்கள் மீது கொலை முயற்சி, வன்முறை, பாலியல் வன்முறை போன்ற தாக்குதல்களை ஏவிவிட்டிருப்பதாக மனித உரிமைகள் அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
தென்னமெரிக்காவில் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றான சீலேவில் பணக்காரர்கள் அதிகம்; அதைவிட ஏழைகள் அதிகம். இரண்டு தரப்புக்குமான இடைவெளி மிகப் பெரியது. வெறும் ஒரு சதவீதப் பணக்காரர்கள் நாட்டின் 33% செல்வத்தை அனுபவிக்கிறார்கள். ஏழை எளியவர்களும் நடுத்தர மக்களும் இதற்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், முன்னாள் சர்வாதிகாரி அகஸ்தோ பினஷேவின் ஆட்சிக் காலத்தில் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ்தான் சீலே இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை மாற்றிப் புது அரசமைப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுள் ஒன்று.
பினஷே ஆட்சிக் காலத்தில் சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டம் ஓய்வூதியம், மருத்துவ வசதி, கல்வி போன்றவற்றைத் தனியார்மயமாக்கியதன் விளைவையே சீலேவின் எளிய மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையை மாற்றி, புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் வகையில் புதிய அரசமைப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
சமீபத்தில் தலைநகர் சாண்டியாகோவில் 10 லட்சம் பேர் கூடி அமைதிவழியில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் உள்ள 8 அமைச்சர்களை பின்யரா ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார். இதைக் கண்துடைப் பாகவே அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். பின்யராவே ராஜினாமா செய்தாக வேண்டும் என்பது அவர்களின் பிரதான கோரிக்கைகளுள் ஒன்றாக இருக்கிறது.
இயற்கை வளம் நிரம்பிய சீலேவில் அமைதி திரும்ப வேண்டுமென்றால், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு செவிசாய்க்க வேண்டும். பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்நாட்டை ஜனநாயகப் பாதையில் செலுத்தும் விதமாகப் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் இந்தக் கொந்தளிப்புகள் அடங்கி, சீலேவில் அமைதி திரும்பும். பின்யரா இதையெல்லாம் செய்வாரா என்பதுதான் கேள்வி.