தலையங்கம்

எண்ணத்தில் மாற்றம் வேண்டும்!

செய்திப்பிரிவு

மீண்டும் மீண்டும் நம் புரணியில் தட்டி நிகழ்காலத்தை நினைவூட்டுகின்றன ரயில் விபத்துகள். நம்முடைய அரசாங்கமோ கனவில் பட்டாம்பூச்சி விற்றுக்கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில், ஜபல்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற ஜனதா விரைவு ரயிலும் மும்பையிலிருந்து வாரணாசி சென்ற காமயானி விரைவு ரயிலும் தடம்புரண்டு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக அரசின் பதில் என்ன? வெள்ளப்பெருக்கைக் காரணமாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியுமா?

ஆற்றுக்கு அருகிலிருந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகரித்ததாகவும், ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர்ப் பெருக்கெடுத்து ரயில் பாதையைக் கடுமையாக அரித்ததாகவும் அரசுத் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. ரயில்வே துறை வட்டாரங்கள், “இந்த விபத்துக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் அதே இடத்தை வேறு இரண்டு ரயில்கள் பாதுகாப்பாகக் கடந்திருக்கின்றன. அதனால்தான், இவ்விரு ரயில்களையும் ரயில்வே ஊழியர்கள் அனுமதித்தனர். அதேசமயம், ஆற்றில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் மெதுவாக ஓட்டுமாறு எச்சரித்தனர். மாநில நிர்வாகத்தின் தரப்பிலான தவறுகளும் விபத்துக்குக் காரணங்களாக அமைந்தன” என்று சொல்கின்றன. ஒரு சம்பவம் நடந்துவிட்ட பிறகு, இப்படி ஆயிரம் காரணங்கள் - நியாயங்கள் சொல்லலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் நியாயமான பதில்களாக இருக்குமா?

இயற்கை இடர்ப்பாடுகளைப் பொறுத்த அளவில், அதை எதிர்கொள்வதில் எல்லை வேறுபாடுகள் இருக்க முடியாது. அடித்துவரும் பெருவெள்ளத்துக்கு எது ரயில்வே எல்லை என்று தெரியுமா, எது மாநில எல்லை என்று தெரியுமா? இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள மாநில அரசு மற்றும் வெவ்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும், தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளும் அமைப்பை நாம்தான் உருவாக்க வேண்டும். இந்த விபத்து நமக்குச் சுட்டிக்காட்டும் இன்னொரு பிரச்சினை இது. ஆனால், இந்திய ரயில்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசினால், நாம் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

இந்திய ரயில்வே மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ககோட்கர் குழுவின் பரிந்துரைகளைப் படித்தவர்கள், உண்மையில் நம்முடைய ரயில்களில் ஏற அஞ்சுவார்கள். அவ்வளவு விஷயங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது பயணிகளின் பாதுகாப்புக்கு. ஒரு உதாரணம், ஆளற்ற ரயில்வே கேட்டுகள். 40% ரயில் விபத்துகளுக்கு இவையே காரணம். 1989-லேயே இவற்றைப் புழக்கத்திலிருந்தே எடுத்துவிடுவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. கால் நூற்றாண்டாகிவிட்டது. இன்னும் 11,000+ ஆளற்ற ரயில்வே கேட்டுகள் உள்ளன. மூன்று நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ரயில்வே துறையிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியது: “ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாதபோது ஏன் மேலும் மேலும் புது ரயில்களை அறிமுகப்படுத்துகிறீர்கள்?”

இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 15 தடம்புரளல்கள் நடை பெற்றுள்ளன. சுதாரித்துக்கொள்ள ரயில்வே துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? இதுபற்றியெல்லாம் பேச ஆள் இல்லை. ஆனால், நாமோ புல்லட் ரயில் கனவில் ஆழ்ந்திருக்கிறோம்.

அடிப்படையில், மக்களுடைய உயிர்கள் உயிர்களாக நமக்குத் தெரியவில்லை. சந்தை, வணிகம், வளர்ச்சி என்பதுபோல உயிர்களும் வெறும் எண்ணிக்கையாகிப்போனதன் விளைவு இது. அணுகுமுறை மாறும்போதுதான் சூழலும் மாறும்!

SCROLL FOR NEXT