தலையங்கம்

பாக்தாதியின் மரணம் ஐஎஸ்ஸின் முடிவுக்குத் தொடக்கமாக இருக்கட்டும் 

செய்திப்பிரிவு

உலகின் கொடூரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐஎஸ் அமைப்பின் நிறுவனர் அபு பக்ர் அல்-பாக்தாதி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டிருப்பது, நிச்சயமாக அந்த இயக்கத்துக்கு ஒரு பின்னடைவுதான். 2011-ல் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு இணையாக பாக்தாதியின் மரணம் பார்க்கப்படுகிறது. பாக்தாதி சிரியாவில் உள்ள இட்லிப் கிராமத்தில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டார். தனது மகன்களுள் மூவருடன் சேர்ந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்து, பாக்தாதி தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

பாக்தாதியால் நிறுவப்பட்ட கிலாபத் அதன் உச்சத்தில் இருந்தபோது, பிரிட்டன் அளவுக்கு நிலப்பரப்பை இராக் - சிரியா எல்லைக்கோடுகளைக் கடந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. உலகெங்கும் பல்வேறு நாடுகளிலிருந்து கணிசமான முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, பயங்கரவாதத்தின் பக்கம் திருப்ப இந்த ஆதிக்கம் ஐஎஸ் அமைப்புக்கு உதவியது.

பிற மதத்தினரைக் காட்டிலும் ஐஎஸ் அமைப்பால் முஸ்லிம் மக்களே அதிகமான வன்முறையை எதிர்கொண்டனர் என்பதும், பொதுச் சமூகத்திலிருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் சக்திகளுக்கு மேலும் ஊக்குவிப்பாகவே ஐஎஸ் அமைப்பின் கொடூரங்கள் அமைந்தன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். எனினும், அதன் ஆதிக்கம் குறைந்த காலமே நீடித்தது. ஐஎஸ் அமைப்பால் ஆளப்பட்ட நகரங்கள் விடுவிக்கப்பட்டன.

அதன் ஜிகாதிகள் தப்பியோடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது பாக்தாதியும் போய்ச்சேர்ந்துவிட்டார். தனது குறுகிய கால வரலாற்றில் மிக பலவீனமான கட்டத்தில் அந்த இயக்கம் இருக்கிறது. அதேசமயம், இதனாலேயே அந்த இயக்கம் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. ஐஎஸ் குழுக்கள் சித்தாந்தரீதியாக ஒன்றுபட்டிருந்தாலும் சுயாதீனமான செயல்பாடுகளைக் கொண்டவை. ஆகையால், பாக்தாதியின் மரணம் அந்த இயக்கத்துக்குப் பேரிழப்பாக இருந்தாலும், அதன் செயல்பாடுகள் முற்றுப்பெற்றுவிட்டன என்று அர்த்தமில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

இரு விஷயங்களில் இப்போது உலகம் கவனம் செலுத்த வேண்டும். ஐஎஸ் உருவானதன் பின்னணியில் இருந்த புவியரசியல் சூழலில் இன்றும் பெரிய மாற்றமில்லை. இராக் அல்கொய்தாவின் தலைவரான அபு முஸாப் அல்-ஸர்காவி 2006-ல் அமெரிக்காவால் கொல்லப்பட்டது அல்கொய்தாவுக்குப் பின்னடைவாக அமைந்தது. ஆனாலும், இதெல்லாம் அந்த அமைப்பை முற்றிலும் ஒழித்துவிடவில்லை.

2011-ல் உள்நாட்டுப் போர்க் குழப்பத்தில் சிரியா மூழ்கியபோது, இராக் அல்கொய்தா இயக்கமானது, பாக்தாதியின் தலைமையில் ஐஎஸ்ஸாக உருவெடுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆக, எந்தச் சூழல், அல்கொய்தாவும் ஐஎஸ்ஸும் உருவாக வழிவகுத்ததோ அந்தச் சூழல் இராக்கிலும் சிரியாவிலும் சரிசெய்யப்பட வேண்டும். மற்றொன்று, ஆயுதத்தைக் கையில் எடுப்பவர்கள் ஆயுதத்தாலேயே முடிவுகளைத் தேடிக்கொள்கிறார்கள் என்பது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உரிய முறையில் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.

SCROLL FOR NEXT