தருமபுரி சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆனாலும், இன்னும் நெஞ்சைவிட்டு அகலவில்லை. இளவரசனின் பெற்றோருக்கு இன்னும் நீதி கிடைத்தபாடில்லை. ஆனால், அரசியல் களத்தில் அதன் பலன்கள் அறுவடையாயின. தொடரும் அடுத்தடுத்த சம்பவங்கள் சாதிய சக்திகள் அரசியல் களத்தை நோக்கி நகர, ஒரு புதிய பரிசோதனைக் களத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டதைப் போன்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்டு இன்றோடு 24 நாட்கள் ஆகின்றன. ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார் என்ற ஒரு காரணம் கோகுல்ராஜைத் தீர்த்துக்கட்ட கொலைகாரர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. முதலில், தற்கொலைச் சம்பவம்போல ஜோடிக்கப்பட்டு, பின்னர் கொலை என்பது அம்பலமாக்கப்பட்ட பின்னரும், காவல் துறையினரின் நடவடிக்கைகள் போதிய வேகத்தில் செல்வதாகத் தெரியவில்லை. இதுவரை 13 பேர் இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் யுவராஜ் இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை.
ஏதோ பத்தோடு பதினொன்று என்பதுபோல, இத்தகைய வழக்குகளை நாம் அணுக முடியாது. சாதி, மதம், இனம் சார்ந்த குற்றங்கள் ஒருவகையில் தேச விரோதக் குற்றங்களே. பல நூறாண்டுகள் அடிமைத் தளத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துவிட்டு, ஓட முற்படும் ஒரு சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்து, மேலும் மேலும் பூசல்களை வளர்த்து முடமாக்க முற்படும் உள்நஞ்சர்களை நாம் சாதாரணமாக அணுகக் கூடாது.
நம்முடைய கிராமப்புறங்களில் மக்களிடையே பணியாற்றும் சமூக அமைப் புகள் தொடர்ந்து ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. “கால் நூற்றாண் டுக்கு முந்தைய சூழலைவிடவும், தமிழகத்தில் இன்றைக்கு சாதியம் வெளியே மிடுக்காகச் சுற்றுகிறது. கிராமப்புறங்களில் விசேஷ நிகழ்ச்சிகளையொட்டி வைக்கப்பட்டும் விளம்பரப் பதாகைகளில் இடம்பெறும் சிறுவர்களின் படங்கள் கூட அவர்களுடைய சாதிப் பட்டங்களுடன் தாங்கி நிற்பதை சகஜமாகப் பார்க்க முடிகிறது” என்கிறார்கள். நகரங்களில் மெழுகு பூசி மறைக்கப்படும் காட்சிகளே கிராமப்புறங்களில் அப்பட்டமாகக் காணக் கிடைப்பவை. அங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும் சாதிய பூசல்கள் நாம் அறியாதது அல்ல. இது மிக அபாயகரமான ஒரு பிரச்சினை. அடுத்த தலைமுறையையும் இனத்தின் பெயரால் பாழடிக்கும் இந்த அக்கிரமத்துக்காக நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். முக்கியமாக, அரசியல்வாதிகளும் அரசு இயந்திரமும்.
சாதியம் எப்போதெல்லாம் தலைதூக்க ஆரம்பிக்கிறதோ, அப்போ தெல்லாம் பொருளாதாரரீதியாகக் கீழே இருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள் ரத்த வெறிக்குப் பலியாவதைப் பார்க்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் சாதிய வன்கொடுமையால் கொல்லப்பட்ட தலித்துகளின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டுகிறது எனும் செய்தி அதிரவைப்பது மட்டும் அல்ல; அபாயத்தின் தீவிரத்தையும் உணர்த்தக் கூடியது. தங்களுக்கு நெருக்கமானவர்களை எவ்வித நியாயமுமின்றிப் பறிகொடுத்து நிற்பவர்களுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது?
பூஜ்ஜிய சதவிகித சகிப்புத்தன்மை அணுகுமுறையுடன் அணுகினால் மட்டுமே நாம் இனஅடிப்படைவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதை அடிப்படையில் நம் ஒவ்வொருவரிடமும் உறைந்தும் ஒளிந்தும் இருக்கும் சாதிய அரக்கனிலிருந்து விடுபடுவதிலிருந்தே தொடங்க வேண்டும். முக்கியமாக அரசு அதிகாரிகள் தங்கள் சுயசாதி உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு, உண்மைக்கும் கடமைக்கும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மனித விரோதக் குற்றங்களும் தேச விரோதக் குற்றங்களும் ஒரு முடிவுக்கு வரும். இல்லாவிட்டால், ‘ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் சாவு’ எனும் செய்தி சகஜமாகிவிட்டதுபோல, ‘சாதி தாண்டிக் காதலித்த இளைஞர் கொல்லப்பட்டு, ரயில் பாதையின் அருகே வீசப்பட்டார்’ எனும் செய்திகளும் சகஜமாகிவிடும் வெட்கமற்ற அவலநிலைக்கு நமது சமூகம் சென்றுவிடும்!