தலையங்கம்

பிஎம்சி வங்கிக் குளறுபடி: காலவரம்பு நிர்ணயித்துக் குறைகள் களையப்பட வேண்டும்

செய்திப்பிரிவு

பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு (பிஎம்சி) வங்கியில் கணக்கு வைத்திருந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டது வங்கியின் இப்போதைய நிலைமை. வங்கியின் கொடுக்கல்-வாங்கலில் காணப்பட்ட மோசமான நிலையை அடுத்து, தனது கண்காணிப்பில் எடுத்துக்கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிகபட்சம் ரூ.1,000 மட்டுமே கணக்கிலிருந்து எடுக்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து, வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்ட கடுமையான கலக்கத்தைத் தொடர்ந்து, அந்த வரம்பை ரூ.10,000-மாக உயர்த்தியிருக்கிறது.

2019 மார்ச் மாதம் வெளியான ஆண்டறிக்கை ‘இந்த வங்கி மூழ்கிவிடும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை’ என்று தெரிவிக்கிறது. வங்கியில் புதிய வைப்புகள் சேர்வது 17% அளவுக்கு உயர்ந்து ரூ.11,617 கோடியானது. வங்கிகளுக்கெல்லாம் இந்த ஆண்டு கடும் நெருக்கடி என்பதால், இந்த வங்கியிலும் லாபம் இல்லை; வாராக் கடன்களும் இரட்டிப்பானது. ஆனால், அரசுத் துறை வங்கிகளை ஒப்பிடும்போது இங்கே ஏற்பட்ட இழப்பு குறைவு. நிதி முறைகேடுகள், வங்கிக்குள் கட்டுப்பாட்டு முறையின் செயலிழப்பு, முறைகேடுகள் குறித்து வெளியில் அதிகம் தெரிந்துவிடாமல் திரைபோட்டு மறைக்கப்பட்டது போன்ற காரணங்களாலேயே வங்கி நலிவுறத் தொடங்கியது.

இந்த வங்கி ‘வீடமைப்பு வளர்ச்சி, அடித்தளக் கட்டமைப்பு’ (எச்டிஐஎல்) நிறுவனத்துக்குத் தனது கடனில் பெரும் பகுதியைத் திருப்பிவிட்டிருக்கிறது. அந்த நிறுவனம் இப்போது திவால் சட்டப்படி சொத்துகளை விற்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. எச்டிஐஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் நீண்ட காலம் பதவி வகித்தவர்தான் பிஎம்சி வங்கியின் தலைவர். வங்கிப் பணத்தை அவர்தான் இந்நிறுவனத்துக்குக் கடனாக அளிக்கக் காரணமாக இருந்திருக்கிறார் என்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வங்கிக் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறது என்றால், ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு அமைப்பு சரியாகச் செயல்படவில்லை என்பது அம்சம். கூட்டுறவு வங்கிகள், மாநில அரசின் நிர்வாகத்தில் உள்ள கூட்டுறவுப் பதிவாளரால் பதிவுசெய்யப்படுபவை; அவர்களுடைய கண்காணிப்பு என்பது தணிக்கைக்கு உட்பட்டவை. நாடு முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட நகரக் கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அவற்றில் சிலவற்றை ரிசர்வ் வங்கி நேரடியாகக் கண்காணிக்கிறது.

இத்தகைய கூட்டுறவு வங்கிகளுக்குப் புதிய வழிகாட்டல்கள் தேவை. பணமதிப்புநீக்கத்துக்குப் பிறகு ஏராளமானோர் தங்களுடைய கையிருப்புகளைக் கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், நிதித் துறைக்குப் பணம் அதிக அளவில் வரத் தொடங்கியது. இந்நிலையில், அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிஎம்சி வங்கி மட்டுமல்ல; மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளில் செயல்படும் அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் முறையான அகத் தணிக்கைகள் நடைபெறுவது அவசியம். பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியின் குறைகளைக் காலவரம்பு நிர்ணயித்துக் களைய வேண்டும். வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிடக் கூடாது.

SCROLL FOR NEXT