தலையங்கம்

நீதிபதிகள் நியமனம்; நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்

செய்திப்பிரிவு

குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.ஏ.குரேஷியை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’, அவரை திரிபுரா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு தனது பரிந்துரையை மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்துக்கு அது வளைந்துகொடுத்துவிட்டதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

குஜராத் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த குரேஷி இட மாறுதலால் இப்போது மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் முதலில் அளித்த பரிந்துரையை ஏற்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. நீதியமைச்சகத்திடமிருந்து கடிதம் கிடைத்த பிறகு, தனது பரிந்துரையைக் கொலீஜியம் மாற்றியிருக்கிறது. கொலீஜியத்துக்கும் அரசுக்கும் இடையில் இது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை ஓய்ந்துவிட்டதா என்று தெரியாது. ஆனால், இரு தரப்பும் ஏதோ சமரசத்துக்கு வந்துள்ளன. கொலீஜியம் தனது நிலையில் உறுதியாக இருந்திருந்தால் மறுபரிந்துரையை ஏற்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியே இல்லை.

கொலீஜியமும் அரசும் பரஸ்பர ஆலோசனை மூலமாகவோ, கடிதப் போக்குவரத்து வாயிலாகவோ கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டால் அது ஏற்கத்தக்கதே. எதுவாக இருந்தாலும், இறுதி முடிவு இப்படி மர்மமாக இருந்திருக்க வேண்டியதில்லை. நீதிபதிகள் தேர்வு, இடமாற்ற விஷயத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம்தான் வெளிப்படையாக அல்லாமல், ரகசியமாகச் செயல்படுகிறது என்று இதுநாள் வரை குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. இப்போது அரசு மீதும் இதே குற்றச்சாட்டு விழுகிறது. நீதிபதி குரேஷியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்பதற்கு மத்திய அரசிடம் தகுந்த காரணங்கள் இருந்திருந்தால் அதை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கலாம். அப்படி இல்லாததால், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, அரசுக்கு எதிராக குரேஷி பிறப்பித்த ஆணைகளுக்காகவே அவருக்குப் பதவி உயர்வு கிடைப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்று கொள்ள நேர்கிறது. குரேஷி பதவி உயர்வு நியமனம் தொடர்பாக மத்திய அரசு என்ன கூறியது என்பதை கொலீஜியமாவது வெளிப்படையாகத் தெரிவித்திருந்திருக்கலாம். நீதித் துறை நியமனங்களில் அரசு தலையிட முடியாதபடிக்கு கொலீஜியம் பாதுகாப்புக் கேடயமாகவே செயல்படுகிறது என்று இதுநாள் வரை கூறிவந்த வாதம் இப்போது வலுவிழக்கிறது.

இனியாவது கொலீஜியத்தின் பரிந்துரைகள் அரசுக்குக் கிடைத்ததிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும். நீதிபதிகளின் நியமனம் அல்லது இடமாறுதல்கள் தொடர்பாக மத்திய அரசுக்குத் தயக்கமோ ஆட்சேபங்களோ இருந்தால் அவை பகிரங்கமாகப் பகிரப்பட வேண்டும். அப்போதுதான் இத்தகைய நியமனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

SCROLL FOR NEXT