தலையங்கம்

அலட்சியத்தின் விளைவே கோதாவரி படகு விபத்து

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த படகு விபத்து நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அரசின் தொடர் கண்காணிப்பு இல்லாதது சுற்றுலாப் பயணிகள் 34 பேரின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது.

சுற்றுலாப் பயணிகள், படகுக் குழுவினர், பாடகர்கள் என்று 73 பேர் அந்த இயந்திரப் படகில் பாப்பிகொண்டலு என்ற இடத்தின் இயற்கை எழிலைக் காணச் சென்றுள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், அரசிடம் அனுமதி பெறாமலும், உரிய அதிகாரிகளுக்குத் தெரியாமலும் படகை சவாரிக்குப் பயன்படுத்தியுள்ளனர். படகில் இருந்தவர்களுக்கு உயிர்காக்கும் மேல்சட்டை (லைஃப் ஜாக்கெட்) அளிக்கப்பட்டிருக்கிறது. சிலர்தான் அதை அணிந்துள்ளனர். படகு சென்றபோது ஆற்றின் மேல்பகுதி அணையிலிருந்து வினாடிக்கு 5 லட்சம் கன அடி தண்ணீரைத் திறந்து விட ஆறு கரைபுரண்டு ஓடியிருக்கிறது. நீரோட்ட வேகமும், மணிக்கு 90 கிமீ வேகத்தில் அடித்த காற்றும் படகைப் படகோட்டியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துவிட்டன. படகு வெகுவேகமாகச் சாய்ந்து பிறகு கவிழ்ந்திருக்கிறது. உயிர் காக்கும் மேல்சட்டை அணிந்த சிலர் மட்டுமே உயிர் தப்ப முடிந்திருக்கிறது. சிலரின் உடல்கள் வெகு நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டன. எஞ்சியவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தைப் பார்க்கும்போது ஆந்திரத்தில் நடைபெறும் படகு விபத்துக்கள் அனைத்துமே ஒரே மாதிரி நடப்பது தெரியும். ஆந்திர ஆறுகளில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் படகு விபத்துக்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆந்திரத்தில் மட்டுமல்ல, ஒரு சாமான்ய உயிருக்கான மதிப்பு ஒட்டுமொத்த நம் நாட்டில் இந்த அளவில்தான் இருக்கிறது.

படகுகளில் சவாரி செய்வது செய்யக் கூடாத செயல் அல்ல; நன்கு பயிற்சிபெற்ற, அனுபவம் உள்ள, அரசிடம் உரிமம் பெற்ற படகுகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். வெள்ளக் காலத்தில் எந்த ஆற்றிலும் சாகசம் செய்யக் கூடாது. எழுபதுக்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு, உரிமம் பெறாமல் படகு ஆற்றில் செல்கிறது என்றால், நிர்வாகம் எங்கோ உடந்தையாக இருக்கிறது என்றுதான் பொருள். கடுமையான வெள்ளக் காலத்தில் ஆற்றங்கரையோரம் இருப்பவர்களை எச்சரிக்கவும், ஆபத்துகளை எதிர்கொள்ளவும் அரசு நிர்வாகிகள் அந்தப் பகுதியிலேயே இல்லாமல் போயிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. அரசு, தனியார், சுற்றுலாப் பயணிகள் என்ற மூன்று தரப்பினரின் தவறுகளும் சேர்ந்து மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கெல்லாம் அலட்சியமும் ஊழலும் கைகோக்கிறதோ அங்கெல்லாம் இத்தகைய விபத்துகள் சாத்தியமே.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு தலா ரூ.10 லட்சமும், தெலங்கானா அரசு ரூ.5 லட்சமும் இழப்பீடு அறிவித்துள்ளன. எத்தனை லட்சங்களைக் கொடுத்தாலும் இழந்த உயிர்களை மீட்க முடியுமா? அரசு மட்டுமல்ல, மக்களும் எச்சரிக்கையாக இருந்தால்தான் இத்தகு விபத்துக்களைத் தடுக்க முடியும்.

SCROLL FOR NEXT