சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் நாட்களிலும் இன்னமும் சாதிய அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது, இந்திய சமூகத்தின் தலையாய வெட்கக்கேடுகளில் ஒன்று. வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியில் விபத்தில் பலியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் இறுதி ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, ஆற்றுப்பாலத்திலிருந்து சடலம் இறக்கப்பட்டு, ஆற்றின் வழியாக எடுத்துச்செல்லப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட அவமதிப்பானது தீண்டாமை ஒழிப்பைத் தனது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த தேசத்துக்குமே பேரவமானம். அதிலும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும், சமூக நீதிக்கான முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் இப்படியான நிகழ்வுகள் நடப்பது இன்னும் அசிங்கம். ஆனால், சம்பவம் நடந்து வாரங்கள் ஆகும் நிலையிலும்கூட இது தொடர்பாக அரசுத் தரப்பில் தீவிரமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருப்பது அதிருப்தியை உண்டாக்குகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் இந்தச் சம்பவத்தைத் தானாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது பாராட்டத்தக்கது. நிர்வாகத் துறைகள் தனது கடமைகளிலிருந்து தவறும்போது அதைத் தடுத்துநிறுத்தி, அரசமைப்பின் வழி கொண்டுசெலுத்தும் பாதுகாவலராக நீதித் துறையே இருக்கிறது என்ற ஆறுதலை இத்தகைய நிகழ்வுகள் அளிக்கின்றன. ஆனால், நீதிமன்றத்தின் கேள்விக்கு, “தலித்துகளுக்குத் தனி மயானம் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று வட்டாட்சியர் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. அரசமைப்புச் சட்டத்துக்கே முரணான ஒரு பதிலை உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது நிர்வாகத் துறையின் பொறுப்பற்றதன்மை மட்டும் அல்ல; அமைப்புக்குள் சாதியப் பாகுபாடுகள் எவ்வளவு நியாயமாகக் கருதப்படுகின்றன என்பதற்கான உதாரணம்.
பேதம் பாராட்டுதல் என்பது சுதந்திர இந்தியாவில் எல்லா வகைகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் மேலேற்றும் நோக்கத்துக்காக மட்டுமே பேதம் பாராட்டும் நடவடிக்கையில் அரசு ஈடுபடலாம். ஆனால், தனியொரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பொதுச் சமூகத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்தும் வகையிலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு ஊரிலும் பொது மயானங்களை அமைப்பதும் பராமரிப்பதும் அரசின் கடமை. சாதி அடிப்படையிலான மயான முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிக்கும் அவமதிப்புக்கும் அரசு பரிகாரம் தேட வேண்டும்; சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலதிகம் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. அரசு தன் பொறுப்பிலிருந்து தவறுகிறது என்று மட்டுமே சொல்லி இத்தகைய விஷயங்களைக் கடந்துவிட முடியாது. சமூகச் சீர்திருத்த இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும்கூட இத்தகைய பிரச்சினைகளில் நேரடியாகக் களம் இறங்க வேண்டும். மக்களிடம் பேச வேண்டும். சக மனிதர்களை இழிவுபடுத்துதலானது சுய இழிவிலிருந்து வெளிப்படும் அநீதியேயன்றி வேறில்லை என்பதை எல்லாத் தரப்பினருக்கும் உணர்த்திடல் வேண்டும்.