அமைதியின்மையால் சூழப்பட்டிருக்கிறது ஹாங்காங். கடந்த பத்து வாரங்களாகத் தொடரும் போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையத் தொடங்கிவிட்டது. சுற்றுலாவுக்குப் பெயர்போன ஹாங்காங், அரசியல் கொந்தளிப்பில் சிக்கியிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் வருவதைக் குறைத்துக்கொண்டுவிட்டனர். சுற்றுலா மட்டுமல்ல; நிதி சேவைகளுக்கும் வர்த்தகத்துக்கும் ஹாங்காங் முக்கிய மையமாகத் திகழ்கிறது. இங்கு இதுவரை இருந்திராத அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கிளர்ச்சிக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சு, ரப்பர் தோட்டாக்களால் சுடுவது என்று ஆரம்பித்த காவல் துறையினர், பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். நகரம் செயலற்றுக்கிடக்கிறது. பொதுப் போக்குவரத்து நின்றுவிட்டது. மாணவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டன் நிர்வாகத்தின் கீழ் இருந்த ஹாங்காங், பழைய ஒப்பந்தப்படி சீனாவுக்கு அளிக்கப்பட்டது. சீனா இதை சுயேச்சையான அதிகாரம் உள்ள பகுதியாகத் தொடர அனுமதித்தது. அதேசமயம், ஹாங்காங்கின் தன்னாட்சியும் அங்கு நிலவும் ஜனநாயகச் சூழலும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்ந்து சீன அரசை அமைதியின்மையிலேயே வைத்திருந்தது. இப்போது அது ஹாங்காங்கைத் தனது இரும்புப் பிடிக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துவருகிறது. அதில் ஒன்றுதான், சீனா தேடுபவர்களைக் கைதுசெய்து அனுப்பி வைப்பதற்கான சட்ட முன்வடிவு. இந்த சட்ட முன்வடிவுக்கான எதிர்ப்பாகத்தான் போராட்டம் தொடங்கியது. இப்போது சட்ட முன்வடிவைக் கைவிடும் முடிவை எடுத்துவிட்டதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்துவிட்டாலும், பிரச்சினை தீர்ந்தபாடில்லை. “சட்ட முன்வடிவு செத்துவிட்டது என்று சொன்னால் போதாது, திரும்பப் பெற்றுவிட்டோம் என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்கின்றனர் ஹாங்காங் மக்கள். சீனாவின் கட்டளைக்கேற்பச் செயல்படும் ஹாங்காங் நிர்வாகி கேரி லாம், தனது பதவியை விட்டு விலக வேண்டும்; ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களைக் காவல் துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; கைதானவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்; தேர்தல் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும்” என்றும் கோரிக்கைகள் தொடர்கின்றன.
ஹாங்காங்கில் இப்படி நிலைமை முற்றுவதற்கு ஹாங்காங் மக்கள் மத்தியில் சீன அரசு நம்பகத்தன்மையை இழந்துவருவதே முக்கியமான காரணம். ஹாங்காங்கின் தன்னாட்சியையும், ஜனநாயகத்தையும் அங்கீகரித்து தன் வாக்குறுதிக்கேற்ப அது தொடர்ந்து நடந்துகொண்டால் பிரச்சினைக்கே வழியில்லை. ஹாங்காங் நிர்வாகத்தைப் பின்னிருந்து இயக்க முற்படும் அதன் அபிலாஷைகளும், ஜனநாயகத்துக்கு எதிரான அதன் நகர்வுகளுமே இவ்வளவு மோசமான சூழலை உருவாக்கிவிட்டிருக்கின்றன. ஹாங்காங்கில் சுமுக நிலை திரும்ப சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையைக் கையில் எடுக்காமல் அமைதி வழியில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண கிளர்ச்சியாளர்கள் முன்னுரிமை தர வேண்டும். இரு தரப்பும் விட்டுக்கொடுத்துப் பேச வேண்டும்.