தலையங்கம்

இலங்கை அரசியல் மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள் வசம் செல்கிறதா?

செய்திப்பிரிவு

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சித் தலைவரும் அவரு டைய சகோதரருமான மகிந்த ராஜபக்ச அறிவித்திருக் கிறார்.

2009-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய போரில் கிடைத்த வெற்றிக்கு அப்போது ராணுவச் செயலராக இருந்த கோத்தபய வகுத்த உத்திதான் முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. அந்தப் பின்னணியிலும், சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கைச் சமூகத்தில் உண்டாக்கியிருக்கும் அதிர்வுகளின் பின்னணியிலும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய முடிவு இது.

இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜபக்ச, தனது ஆதரவாளர்கள் 2016-ல் தொடங்கிய ‘ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன’வுக்கு இப்போதுதான் தலைவர் ஆகியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டும். அதில் கோத்தபயவை நிறுத்திவிட்டு, பிறகு பிரதமர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற திட்டத்தில் இம்முடிவை அவர் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச அரசு, கிட்டத்தட்ட சர்வாதிகார அரசுபோல நடந்துகொண்டது. ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைத்தது. சிங்களப் பேரினவாதத்தை ஊக்குவித்தது. நல்லாட்சி தருவோம் என்று 2015-ல் பொறுப்பேற்ற இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டாக அறிவித்தன. மைத்ரிபால சிறிசேன அதிபராகவும், ரணில் விக்கிரம சிங்கே பிரதமராகவும் பதவி வகித்தனர். ஆனால், இவ்விரு தலைவர்களாலும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டு அரசியல், பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியவில்லை.

இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளில் கடந்த ஆண்டு கூட்டணி நொறுங்கியது. 2018-ல் ரணிலை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டுவர சிறிசேன முயன்றார். நீதிமன்றங்கள் அந்த முயற்சியைத் தடுத்து ரணிலை மீண்டும் பதவியில் அமர்த்தின. தொடர் குண்டுவெடிப்புகள், இரு தலைவர்களின் போதாமைகளையும் குறைபாடுகளையும் மீண்டும் விவாதத்துக்குக் கொண்டு வந்தன. இப்படியான சூழலில்தான் அதிபர் வேட்பாளராக கோத்தபய அறிவிக்கப்பட்டிருக்கிறார். எனினும், மகிந்தவின் கணக்குகள் அப்படியே நடந்துவிடும் என்றும் சொல்வதற்கு இல்லை. கோத்தபய எனும் பெயரானது போர்க் குற்றங்கள், படுகொலைகள், ஊழல்களோடு தொடர்புடையது; மக்கள் மத்தியில் அச்சத்தோடு பிணைக்கப்பட்டது. மேலும், இரு சகோதரர்களும் நாட்டின் மிக உயர்ந்த இரு பதவிகளை நேரடியாகவே குறிவைத்து இறங்குவது குடும்ப அரசியல் விவாதத்தையும் உண்டாக்கும்.

அதிபர் சிறிசேனவின் இலங்கை சுதந்திரக் கட்சி கோத்தபயவை ஆதரிக்கக்கூடும். ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய வேட்பாளர் யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. அடுத்துவரும் மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலும் எப்படியான நகர்வுகளை முன்னெடுக்கப்போகின்றனர் என்பது அக்கட்சியின் எதிர்காலத்தை மட்டுமல்லாது, இலங்கையின் எதிர்காலத் தையும் தீர்மானிக்கும்.

SCROLL FOR NEXT