தலையங்கம்

விடைபெற்றார் விண் நாயகர்!

செய்திப்பிரிவு

இந்தியக் குடியரசுத் தலைவர்களில் மிகவும் வித்தியாசமானவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். சாமானியக் குடும்பத்தில் பிறந்து, சாமானியராக வளர்ந்து, சாமானியர்களுக்காகச் சிந்தித்து, பேசி, உழைத்த அறிவியலாளர், கர்ம வீரர். இளம் வயது முதலே உழைத்தவர். பெரும் உத்வேகத்துடன் படித்து முன்னேறியவர். நாட்டின் மிக உயரிய பதவிக்கு வந்த முதல் அறிவியலாளர். தனக்கு மிகவும் பிடித்த தொண்டறமான மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியிலேயே தோய்ந்திருந்தபோது அவர் உயிர் பிரிந்தது. தனது விருப்பப்படியே அவர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

மரணம் எல்லாருடைய வாழ்வுக்கும் முடிவுகட்டுகிறது. சிலர் தமது வாழ்வின் மூலம் அந்த முடிவை மறுத்து இறவாப் புகழை அடைகிறார்கள். தங்கள் பங்களிப்புகளின் மூலம், தாங்கள் ஆற்றிய பணிகளின் மூலம், சமுதாயத்தின் மீது செலுத்திய செல்வாக்கின் மூலம் அவர்கள் மரணத்தை மறுக்கிறார்கள். அர்த்தபூர்வமான வாழ்வின் தன்மை அது. அத்தகைய வாழ்வை வாழ்ந்தவர் கலாம்.

தென்கோடி ராமேஸ்வரத்தில் பிறந்த கலாமின் புகழ், வடகோடி டெல்லியின் அதிகார வாசல்வரை பரவி நிற்கிறது. ‘எஸ்.எல்.வி-3’ என்ற செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை உருவாக்கியதில் தொடங்கி ஏவுகணைகளையும் வடிவமைத்துத் தயாரித்து இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற ஏற்றத்தைப் பெற்றார். அணுசக்தித் துறைக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி அமைப்புக்கும் இணக்கமான பாலமாக இருந்தவர். விண்வெளி ஏவு ஊர்தி தயாரிப்பு, அணுகுண்டு வெடிப்பு, ஆயுதசாலைகள் அமைப்பு என்று அனைத்திலும் முத்திரை பதித்த இவர், ஊனமுற்ற குழந்தைகள் வலியில்லாமல் நடக்க தாங்கு கட்டைகள் தயாரித்துத் தந்த மனிதாபிமானமுள்ள விஞ்ஞானியும்கூட.

போர் விமானியாக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில், மனம் சோர்ந்து ஹரித்வாருக்குச் சென்றபோது, சுவாமி சிவானந்தரைச் சந்தித்து அவருடைய ஆசியையும் மன சாந்தியையும் பெற்றுத் திரும்பினார். தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்துக்காக அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தேசத் தொண்டையும் மணந்துகொண்டார். ஆன்மிகத் தேடலில் சமயத்தின் எல்லைகள் குறுக்கிட அவர் அனுமதிக்கவில்லை.

கடுமையான அறிவியல், அரசியல் பணிகளுக்கு இடையில் அவர் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ முதலான நூல்கள் இன்று இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமாக நிலைத்துவிட்டன. பத்மபூஷண், பத்மவிபூஷண் என்று தொடங்கி உயர்ந்த சிவில் விருதுவரை பெற்ற பாரத ரத்தினமாகப் பிரகாசித்தவர் அப்துல் கலாம்.

கலாம், பல்வேறு துறைகளில் ஜொலித்தவர். சொல்லப்போனால், அவர் தொட்டதெல்லாம் துலங்கிற்று. தனது மகத்தான கனவுகளாலும் அசாத்தியமான உழைப்பாலும் கூரிய அறிவாலும் எடுத்த காரியம் யாவினும் வெற்றிபெற்றார். பலவீனமான பின்னணியும் ஆதரவற்ற சூழலும் ஊக்கம் கொண்ட ஒருவரைச் சிறுமைப்படுத்தும் திறன் கொண்டவை அல்ல என்பதைத் தன் வாழ்வின் மூலம் நிரூபித்தார். பொறுப்பேற்ற ஒவ்வொரு துறையிலும் அதன் எல்லைகளை விரிவுபடுத்தினார். பணிசெய்த ஒவ்வொரு இடத்திலும் கலாமுக்கு முன், கலாமுக்குப் பின் என்று வரலாறு எழுதலாம் என்னும் அளவுக்குத் தன் ஆளுமையின் தடத்தை அழுத்தமாகப் பதித்தார். இத்தனையையும் அப்பழுக்கற்ற நேர்மையுடன் செய்தார் என்பதுதான் அவரது மதிப்பைக் கணிசமாக உயர்த்துகிறது.

பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் ஒப்பற்ற மரியாதையையும் பெற்ற கலாம், இவற்றில் எதுவுமே தன் தலையில் கனத்தைக் கூட்டவோ தன் எளிமையைக் களங்கப்படுத்தவோ அனுமதிக்கவே இல்லை. அதிகார மட்டத்தில் புழங்க வாய்ப்பே கிடைக்காதவர்கள் நேர்மை, எளிமை என்று பேசலாம். அந்த வாய்ப்பு கிடைத்த பிறகும் இவற்றைப் பற்றிப் பேசக்கூடிய ஆளுமைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அத்தகைய அரிய ஆளுமைகளில் ஒருவர் கலாம். வலுவானதும் ஆழமானதுமான அவரது கருத்துக்களை விடவும் தன் வாழ்வின் மூலம் அவர் நிகழ்த்திக்காட்டிய முன்னுதாரணங்கள் வலிமையானவை. அவரது சொற்கள் உயர்வானவை. அந்தச் சொற்களின் விளக்கம் அவரது வாழ்வு.

உலகில் சாதனையாளர்களுக்குப் பஞ்சம் இல்லை. நேர்மையான சாதனையாளர்களும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். ஆனால், பிறரையும் சாதனையாளர்களாக ஆக்குவதற்கான ஊக்கத்தைத் தந்தவர்கள் மிகவும் குறைவு. பிறருக்கு, குறிப்பாகச் சிறுவர்களுக்கு, சாதிப்பதற்கான ஊக்கம் தருவதையே தன் வாழ்வின் தலையாய பணியாகச் செய்துவந்தவர் அப்துல் கலாம். சாதி, மதம், இனம், மொழி என எல்லா விதமான பேதங்களுக்கும் அப்பாற்பட்டு அவரது தாக்கம் இளைஞர்களிடையே பரவியிருந்தது. தன்னிடம் பேச விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் தன் காதுகளைத் திறந்துவைத்துக் காத்திருந்தவர் அவர். சுந்தந்திர இந்தியாவில் இத்தகைய ஆளுமை என இன்னொருவரைச் சட்டென்று அடையாளம் காட்டிவிட முடியாது என்பதே அவரது அருமையை உணர்த்துகிறது.

நேர்மை என்பது படித்து வாங்கக்கூடிய பட்டம் அல்ல. சாதனை புரியும் துடிப்பு, மேலான உலகைக் காண விரும்பும் வேட்கை ஆகியவை வெறும் கோஷங்களால் உருவாகிவிடக் கூடியவை அல்ல. ஆழ்மனதில் ஏற்படும் அழுத்தமான பதிவுகளே இந்தப் பண்புகளை உருவாக்கும். வெறும் சொற்களால் ஏற்பட்டுவிடக்கூடிய விளைவு அல்ல இது. தர்க்கரீதியான சொற்களாலும் கண்கூடான தன் சுய உதாரணத்தாலும் இந்தப் பண்புகளை இளைய மனங்களில் பதியவைத்தவர் கலாம். லட்சியவாதம் என்பது பிழைக்க உதவாத பத்தாம்பசலித்தனம் என்ற கண்ணோட்டம் பொதுவாழ்வில் வேகமாகப் பரவிவரும் நிலையில், லட்சியவாதத்தின் ஆன்மாவை இளைய மனங்களில் மீட்டெடுத்தவர் கலாம். லட்சியவாதம் என்பது மேலான எதிர்காலத்துக்கான விதை என்பதைப் புரியவைத்தவர். தன் அனுபவங்களின் மூலமாக, பரந்த அறிவின் வாயிலாகத் தன் கனவுகளைத் தெளிவான வரைபடமாக மக்கள் முன்வைத்தவர். இன்றைய கனவு என்பது நாளைய யதார்த்தம் என்பதைப் புரியவைத்தார். லட்சியவாதமும் மகத்தான கனவுகளும் ஒருநாளும் காலாவதியாகாது என்பதை நிரூபித்ததே அவரது மகத்தான பங்களிப்பு!

SCROLL FOR NEXT