தலையங்கம்

அமெரிக்க ஜனநாயகக் கட்சி இந்திய எதிர்க்கட்சிகளுக்குச் சொல்லும் செய்தி

செய்திப்பிரிவு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இந்தப் பக்கம் அதிபர் ட்ரம்ப் வலுவான இடத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்குச் சவால் விட வேண்டிய ஜனநாயகக் கட்சியோ மிகவும் சரிந்து காணப்படுகிறது. 2020 அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் 24 பேர் தங்களை முன்னிறுத்திக்கொண்டு நிற்பது, அந்தக் கட்சி பெரிய சிக்கலில் ஆழ்ந்திருப்பதையும் ஜனநாயகக் கட்சியினர் மத்தியிலேயேகூட செல்வாக்கைப் பெறத்தக்க ஒரு தலைமை கடந்த நான்காண்டுகளில் உருவாகவில்லை என்பதையுமே காட்டுகிறது.

அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், முன்னாள் துணை அதிபரான ஜோ பிடேன் (76) முன்னே நிற்கிறார். ஆனால், நிறவெறியும் பிரிவினை எண்ணமும் கொண்டவர்களுடன் சமரசம் செய்துகொண்டு, பதவியில் ஒட்டிக்கொண்டிருந்ததாக சொந்தக் கட்சியினராலேயே சாடப்பட்டவர் அவர். ஜனநாயகக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவையும் உலக நாடுகளில் மதிப்பையும் கூட்டிய முந்தைய அதிபர்கள் ஜான் எஃப்.கென்னடி, பில் கிளின்டன், பராக் ஒபாமா ஆகியோர் போட்டியிட்டபோது அவர்களுக்கிருந்த வயதைவிட, ஜோ பிடேனுக்கு 30 வயது அதிகம். கலிபோர்னியா மாகாண செனட்டர் கமலா ஹாரிஸ், மசாசூசெட்ஸ் செனட்டர் எலிசபெத் வாரன் இருவரும் ‘அமெரிக்காவின் அரசியல் பொருளாதாரத்தில் சில அடிப்படை மாற்றங்கள் வேண்டும்’ என்று பேசியது அவர்கள் மீது கவனத்தை ஏற்படுத்தியது. 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டனை ஆரம்ப கட்டத்தில் கிட்டத்தட்டத் தோற்கடித்தேவிட்ட பெர்னி சான்டர்ஸுடன் இவ்விருவரும் வேட்பாளர் பதவிக்கான போட்டியில் மோத வேண்டியிருக்கும். கட்சிக்குள் முற்போக்கான சிந்தனையுள்ள பெர்னி சான்டர்ஸும் அதிபர் தேர்தலில் வேட்பாளராகும் வாய்ப்புள்ளவராகவே பார்க்கப்படுகிறார். 2016-ல் அவர் செய்த பிரச்சாரம், சோஷலிஸம் என்ற கொள்கை அவ்வளவு மோசமானது அல்ல என்று முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அமெரிக்கர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், ட்ரம்புக்குச் சவால் விடத்தக்க அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையை, எழுச்சியை ஊட்டக்கூடிய செல்வாக்கோடு யாரையும் இதுவரை பார்க்க முடியவில்லை.

உட்கட்சி ஜனநாயகத்தை ஓரளவுக்கு வலுவாகத் தக்க வைத்திருக்கும் அமெரிக்காவின் பிரதான எதிர்க்கட்சியிலேயே ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலானது ஒரு நல்ல தலைவருக்கான பற்றாக்குறையை மட்டும் சுட்டவில்லை. புதிதாக உருவாகிவரும் உலகளாவியச் சவால்களுக்கு ஜனநாயகரீதியாக ஈடுகொடுக்கக் கூடிய புதிய கற்பனைகளுக்கான பற்றாக்குறையையும் சேர்த்தே சுட்டுகிறது. அமெரிக்க முதலாளித்துவம் - ஜனநாயகம் இரண்டையும் பொருத்தி, நாட்டை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் ஒரு தலைவரை அமெரிக்கர்கள் இன்று எதிர்பார்க்கின்றனர். இந்திய எதிர்க்கட்சிகளிடம் இந்தியர்கள் எதிர்பார்ப்பதும் தனித்துவமான கதையாடலைத்தான். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டுவதையும் விமர்சிப்பதையும் மட்டுமே கொண்டு இனிவரும் காலங்களில் எதிர்க்கட்சிகள் வண்டியோட்ட முடியாது; தனக்கென்று ஒரு புது கதையாடல் தேவை!

SCROLL FOR NEXT