தலையங்கம்

மொழி சமத்துவத்துக்கான ஒருமித்த குரல் தொடரட்டும்

செய்திப்பிரிவு

தமிழில் நடத்தப்படாத அஞ்சல் துறைத் தேர்வுகளை ரத்துசெய்திருக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டது குறித்து, கட்சி பேதமற்று தமிழ்நாட்டின் கட்சிகள் எழுப்பிய கடும் எதிர்ப்பை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளது மத்திய அரசு. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் அஞ்சல் துறைத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில துறைகளின் தேர்வுகள் மட்டுமல்லாது, இனிவரும் காலங்களில் யூபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட மத்திய தேர்வாணையங்கள் நடத்தும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் எழுதுவதற்கு வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

மத்திய அரசின் உயர் பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளைத் தமிழிலேயே எழுதும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழில் எழுதும் வாய்ப்பினால் கிராமப்புற மாணவர்கள் பலரும் மத்திய அரசின் உயர் அதிகாரிகளாகும் சூழல் உருவாகியிருக்கிறது. அதிகாரிகளாவதற்கான வாய்ப்புகளைப் பெற்றபோதிலும்கூட மத்திய அரசின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக எஸ்எஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழில் எழுதும் வாய்ப்பு இன்னும் உருவாகவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நேரடிப் பணி நியமனங்களில், தமிழக மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றபோதிலும், அலுவலகப் பணியாளர்களாக வேலையில் சேர்ந்து, பதிவு மூப்பின் அடிப்படையில் உயர் பதவிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இல்லை என்பதே உண்மை.

சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைப் பிராந்திய மொழிகளில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டபோது, அதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்று தமிழகத்திலிருந்து கடும் ஆட்சேபக் குரல்கள் எழுந்தன. உடனே, தமிழிலும் தீர்ப்பின் மொழிபெயர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அஞ்சல் துறைத் தேர்விலும் அதுவே நடந்திருக்கிறது. தேர்வு நடந்துமுடிந்த நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் தமிழிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் தமிழகத்தின் கருத்தை எதிரொலித்த பிறகும்தான் மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் மொழியுரிமைக்காகத் தமிழகம் குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியே எழுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தின்படி சாதி, மதம், பிறப்பிடம், பாலினம் என்று எந்த அடிப்படையிலும் பாகுபாடுகளை அனுசரிக்கக் கூடாது; பாகுபாடு காட்டப்படக் கூடாதவை என்கிற இந்தப் பட்டியல் காலந்தோறும் வளரும் தன்மை கொண்டது. நாட்டின் அத்தனை அலுவல் மொழிகளையும் பாகுபாடின்றி பாவிப்பதை அவற்றுக்குச் சம இடத்தை வழங்குவதன் மூலம் மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

SCROLL FOR NEXT