அமெரிக்க, கியூப ராஜீய உறவுகள் ஒரு நல்ல இடத்தின் உச்சத்தை நோக்கி நகர்ந்திருக்கின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவே இதைக் குறிப்பிட வேண்டும். அமெரிக்கா முன்பு தன் பகை நாடுகளாகக் கருதியவற்றுடனான உறவை வலுப்படுத்துவதன் தேவையை அவர் உணர்ந்ததன் விளைவாகவே இது சாத்தியமாகியிருக்கிறது. கூடவே, கத்தோலிக்க மத பீடத்தின் தலைமையகமான வாட்டிகனும் கனடாவும் கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொண்ட ரகசிய முயற்சிகளும் அமெரிக்க - கியூப உறவை மேம்படுத்தியிருக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஐஸனோவர் ஆட்சிக் காலத்தில், கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்கு முன் துண்டிக்கப்பட்ட ராஜீய உறவு இப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஐஸனோவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அதிபர்கள், கியூப அரசைக் குலைக்கவும், அந்நாட்டைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தவும், அந்நாட்டுத் தலைவர்களைத் தீர்த்துக்கட்டவும், நிழல் யுத்தத்தை நடத்தவும் மேற்கொண்ட முயற்சிகளை உலகம் அறியும். பிடல் காஸ்ட்ரோவின் ராஜதந்திரத்தாலும் அந்நாட்டுக் குடிமக்களின் கடுமையான உழைப்பாலும் உலகின் மாபெரும் வல்லரசின் அத்தனை முயற்சிகளுக்கும் முடிவு கட்டப்பட்டது. எனினும், கியூபா இதற்காகக் கொடுத்த விலை அதிகம். முக்கியமாக, பொருளாதாரம் சார்ந்து நிறைய இழப்புகளைச் சந்தித்தது கியூபா. அதேபோல, அமெரிக்காவும் பாதிக்கப்பட்டது. 1992 முதல் கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் ஐ.நா. சபையின் கண்டனத்துக்குள்ளாயின. கூடவே, லத்தீன்- அமெரிக்க நாடுகளிடையே அமெரிக்கா தனித்துவிடப்பட்டது. எனினும், தோல்வி மேல் தோல்வி கண்டாலும், தம் வெறுப்பு அரசியலிலிருந்து விடுபட முடியவில்லை அமெரிக்க அதிபர்களால்.
ஒபாமா ஆத்மசுத்தியோடு இந்த விவகாரத்தை அணுகினார். "செயல்படுத்த முடியாத கொள்கையை அமெரிக்க அரசு இத்தனை ஆண்டுகளாகக் கடைப்பிடித்துவந்தது" என்று வெளிப்படையாகவே தங்களுடைய கியூபக் கொள்கையின் தோல்வியை ஒப்புக்கொண்டார். விளைவாக, அமெரிக்க - கியூப உறவில் புது அத்தியாயம் மலர்ந்திருக்கிறது.
வெறுமனே நல்லெண்ணங்களும் சமாதான நோக்கங்களும் மட்டுமே இந்தப் புதிய நகர்வின் பின்னணியில் இல்லை. வழக்கம்போல, சந்தை நோக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதிய பொருளாதார மாற்றங்களுக்குத் தயாராக தனியார் முதலீட்டை நோக்கி நகரும் கியூபா, தங்களுக்கு நல்ல களமாக இருக்கும் என்று அமெரிக்க முதலாளிகள் நினைக்கின்றனர். முக்கியமாக, தங்கள் உற்பத்திப் பொருட்களுக்குப் புதிய சந்தைகளைத் தேடிவரும் அமெரிக்கப் பண்ணையாளர்களின் நலன்கள் அமெரிக்க அரசின் இந்த முடிவில் புதைந்திருக்கின்றன. எனினும், எல்லாவற்றை மீறியும் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தத் தருணத்தில் கியூப அரசு முன்னெடுக்க வேண்டிய முக்கியமான ஒரு நகர்வு உண்டு. அது ஜனநாயகத்தை நோக்கி மேலும் பல அடிகள் எடுத்துவைப்பது. ஏனெனில், புரட்சிக்குப் பின் கியூப அரசு மேற்கொண்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் கியூப மக்களின் நிபந்தனையற்ற ஆதரவு இருந்ததற்கு முக்கியமான அடிப்படை ஒன்று உண்டு. அது அமெரிக்க அச்சுறுத்தல். கியூபாவில் முழு அரசியல் சுதந்திரத்துக்கு வழியில்லாமல் இருப்பதை அமெரிக்க அச்சுறுத்தலின்பேரிலேயே இதுவரை நியாயப்படுத்திவந்தது கியூப அரசு. இனி அது முடியாது. ஆக, புரட்சிகர அரசு ஜனநாயகத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் வந்துவிட்டது!